சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில், நீதிகேட்டு அவரது தாய் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வருகின்றார். அதனை தொடர்ந்து, மாணவியின் தாயார் செல்வி மற்றும் தந்தை ராமலிங்கம் ஆகியோர் இன்று (செப். 5) சென்னை டிஜிபி அலுவலகத்தில் யூ-ட்யூபர் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில்,'The K tv' எனும் பெயரில் யூ-ட்யூப் சேனல் நடத்தி வரும் கார்த்திக் பிள்ளை என்பவர், தனது யூ-ட்யூப் சேனலில் தனது மகள் குறித்தும், தன்னைப்பற்றியும் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருகிறார். மேலும், அந்த நபர் தனது மகள் 9ஆவது படிக்கும் வரை இன்சியல் 'G' என இருந்ததாகவும், பின்னர் தான் ராமலிங்கத்தை திருமணம் செய்து கொண்ட பிறகு கள்ளக்குறிச்சி மாணவியின் இன்சியல் 'R' எனப் போட்டு கொண்டதாகவும் அவதூறு பரப்பி வருகிறார்.
பள்ளி நிர்வாகத்திடம் இருந்து ஆதாயம் பெற்றுக்கொண்டு தன்னைப்பற்றி அபாண்டமாகப்பேசி வரும் கார்த்திக், கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தையை நான் கொலை செய்திருக்கலாம் என்றும் பேசும் வீடியோவால் மகளை இழந்து வாடும் தங்களுக்கு மன உளைச்சலாக உள்ளது' என கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் செல்வி,"என்னைப் பற்றியும், எனது மகள் பற்றியும் அவதூறாகப் பேசிவரும் யூ-ட்யூபர் அதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும். மகள் குறித்து தவறாகப் பேசுவதுடன் அவர் என் மகளே அல்ல என பேசுவது மன வேதனை அளிக்கிறது" என்றார்.
இதற்கு, கள்ளக்குறிச்சி மாணவியின் பிறப்புச்சான்றிதழ், பள்ளிச்சான்றிதழ், அவர்களின் திருமண பத்திரிகை, திருமண புகைப்படங்கள் ஆகியவற்றை ஆதாரங்களாக காண்பித்தார்.
மேலும் அவர் கூறியதாவது,"எனது மகள் இறப்பில் இன்னும் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. பள்ளி நிர்வாகம் இதுவரை அந்த சந்தேகங்களை போக்கவில்லை. இதுநாள் வரை பள்ளியில் பதிவான சிசிடிவி காட்சிகளை எங்களிடம் காண்பிக்கவில்லை. மகளின் மரணம் தொடர்பாக சிபிசிஐடி காவலர்கள், முதல் நாள் மட்டுமே சென்று விசாரித்தனர். அதன் பிறகு, அவர்கள் விசாரிக்கவேயில்லை.
மாணவி மரணம் நடந்த பள்ளியில் உள்ள கைரேகை ஏற்கெனவே இருந்த வண்ணப்பூச்சு எனக் கூறுகிறார்கள். ஆனால் அது உண்மையல்ல, அந்தப் பள்ளிக்கு பல முறை சென்றுள்ளேன். அங்கு அதுபோல் கைரேகை இருந்ததில்லை. மகளின் இறப்பிற்குப் பின்னரே அந்த கைரேகை வந்துள்ளது" என்றார்.
தனது மகள் மரணத்தில் இன்னும் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதாகவும், இதுகுறித்து சிபிசிஐடி தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். நீதிமன்றத்தில் தெரிவித்த தகவல்களில் நம்பிக்கை இல்லை எனவும், இதுகுறித்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: குற்றவாளிகளை தப்ப விட மாட்டோம் என்று முதலமைச்சர் உறுதி அளித்தார்... ஸ்ரீமதியின் தாயார் செல்வி...