அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, அது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில், ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து நவம்பர் 11ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
அதில், அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாகத்தில் தற்காலிக நியமனத்தில் துணை வேந்தர் சூரப்பா, ஆசிரியர் சங்கத் தலைவர் சக்தி நாதன் ஆகியோர் ஒருவருக்கு 13 முதல் 15 லட்சம் ரூபாய் வரை சுமார் ரூ. 80 கோடி அளவுக்கு வசூல் செய்துள்ளனர். அதேபோல், ரூ. 200 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக திருச்சியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளார். மேலும், தேர்வுத்துறையில் பணியாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டதிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக வரதராஜன் என்பவர் புகார் அளித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கூடுதல் பதிவாளர் பணியிட நியமனத்துக்கு ஆட்சிமன்றக் குழுவின் அனுமதி பெறவில்லை என்றும் துணை வேந்தர் சூரப்பா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவரது மகள் மூலம் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளுக்கு இயந்திரங்களை கொள்முதல் செய்துள்ளதாகவும் ஆதிகேசவன் என்பவர் புகார் அளித்துள்ளார்.
அரியர் விவகாரம், சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகமே நிதி திரட்டும் என்று மத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் எழுதியது உள்ளிட்ட விவகாரங்களில் உள்நோக்கத்துடன் சூரப்பா செயல்பட்டு வந்ததாக புகார்கள் வந்ததால், ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து ஓய்வு உயர் நீதிமன்ற நீதிபதி கலையரசன் கூறும்போது, "அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விரைவில் விசாரணையை தொடங்க உள்ளேன். புதிய அலுவலகத்தில் நாளை (நவம்பர் 16) பொறுப்பேற்க திட்டமிட்டுள்ளேன். அதன் பிறகு புகார்தாரர்கள், துணைவேந்தர், பதிவாளர், ஆசிரியர் சங்க நிர்வாகிகள், மூத்த பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்படும்" என தெரிவித்தார்.