இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "யாழ்ப்பாணம் நகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், இலங்கை அரசால் நேற்று (ஏப்.9) காலை கைது செய்யப்பட்டார். இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில், நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கி விடுதலை வழங்கியிருக்கின்றது. இந்தக் கைது நடவடிக்கைக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இதன் பின்னணி என்ன?
அண்மையில், யாழ்ப்பாணம் மாநகராட்சி சார்பில் மாநகரக் காவலர்கள் ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டுவோர், அசுத்தம் செய்வோர், எச்சில் துப்புவோர், சாலைகளை மறித்து வாகனங்களை நிறுத்துவோருக்கு அபராதம் விதிப்பது, ஒழுங்குபடுத்துவது உள்ளிட்டப் பணிகளை செய்துவந்தனர்.
அவர்களுக்கு சீருடை கிடையாது. சாதாரண உடையில் பணிகளைச் செய்யும் போது, பல இடங்களில் கேள்விகள் எழுந்தன. எனவே, அவர்களுக்கு, கொழும்பு மாநகரக் காவலர்களின் சீருடை போலே மாற்று சீருடை வழங்க விஸ்வலிங்கம் மணிவண்ணன் முடிவு செய்தார். இலங்கை அரசு கெசட் ஆணையின்படி, இவ்வாறு சீருடை வழங்க அவருக்கு அதிகாரம் உள்ளது.
அதனடிப்படையில் ஐந்து காவலர்களுக்கும் தனிச் சீருடை தைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அந்தச் சீருடை விடுதலைப் புலிகளின் ஆளுமையிலிருந்த தமிழ் ஈழக் காவலர்கள் அணிந்த வண்ணத்தில் இருந்திருக்கின்றனது. அதனைக் காரணம்காட்டி, அவர் விடுதலைப் புலிகள் அமைப்பு மீளவும், கட்டி எழுப்பவும் முயல்கின்றார். இது ஒரு பயங்கரவாத நடவடிக்கை என்று கூறி விஸ்வலிங்கம் மணிவண்ணன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கொழும்பு மாநகரக் காவலர்களுக்கு ஒரு நீதி; யாழ்ப்பாணத் தமிழருக்கு ஒரு நீதி என்ற நிலையே தொடர்கின்றது. இலங்கை ஒரு பாசிச நாடு என்பதையே இந்தக் கைது நடவடிக்கை காட்டுவதாக, பன்னாட்டு அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்து இருக்கின்றனர். ஒரு மாநகர சபைக்கான நிர்வாக கட்டமைப்பை, தமிழர்கள் ஏற்படுத்த முயல்வதைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாத சிங்கள ஆட்சியாளர்கள், ஒருபோதும் தமிழருக்கு சம உரிமை தர மாட்டார்கள்.
எனவே, ஈழத்தமிழர்களுக்குத் தன்னாட்சி உரிமைகள் கிடைத்திட, உரிய நடவடிக்கைகளை, உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்ட சம்பவம் - நாடு கடந்த தமிழீழ அரசு கண்டனம்