நாகூரில் பிறந்த இஸ்மாயில் முகமது ஹனிபா பின்னாட்களில் நாகூர் ஹனிபா என்று அழைக்கப்பட்டார். குடும்ப வறுமை காரணமாக பாட்டு பாடி சம்பாதிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்ட நாகூர் ஹனிபா, தனது முதல் கச்சேரியை 13 வயதில் நடத்தினார், அதுவும் மாட்டு வண்டியின் மீது... பின்னர் திருமண வீடு, தர்கா, இஸ்லாமிய துறவிகளின் கல்லறை என பல இடங்களில் ஹனிபாவின் குரல் ஒலிக்கத் தொடங்கியது. அப்போது ஹனிபாவுக்கு போட்டிகள் இல்லை, ஒரே மாதத்தில் 50 கச்சேரிகள் அவர் குரலில் அரங்கேறும்...
இஸ்லாமியரான ஹனிபா, திராவிட கொள்கைகள் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக பெரியாருடன் பயணிக்கத் தொடங்கினர். பின்னர் கருணாநிதியின் நட்பும், அண்ணாவின் பழக்கமும் அவரை திமுகவின் பக்கம் அழைத்து வந்தது. பெரியார் நாகப்பட்டினம் சென்றால் ஹனிபாவின் குரலைக் கேட்காமல் திரும்பமாட்டாராம், ஹனிபாவை பாடச் சொல்லி கேட்டுவிட்டு ‘உனக்கு மைக்கே தேவையில்லை’ என்பாராம்...
ஆரம்ப காலங்களில் இவர் திருமண இல்லங்கள் மற்றும் பிற இடங்களில் பாடிய பாடல்கள் பதிவு செய்யப்படவில்லை. அப்போதெல்லாம் பிரபலமான இந்தி பாடல்களின் இசையை எடுத்து, அதற்கேற்ப தமிழ் வரிகளை எழுதிப் பாடுவது வழக்கம். இசைக்கு உரிமைகோரும் பிரச்னை இல்லாத காலமது, ஹனிபா குரலில் உருவான பல பாடல்களை அப்போது பதிவு செய்ய முடியாதது நம் துரதிருஷ்டம்.
ஹனிபாவின் கச்சேரி இல்லாத திமுக மேடைகளே இருக்காது. அவர் பாடி முடித்தபின்தான் திமுக கூட்டங்கள் தொடங்கும். ஓடி வருகிறான் உதயசூரியன், கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே, நீ எங்கே சென்றாய் அண்ணா, அழைக்கிறார் அண்ணா ஆகிய பாடல்களை இன்று கேட்டாலும் திராவிட உடன்பிறப்புகளுக்கு மெய் சிலிர்க்காமல் இல்லை.
‘இந்தியா எங்கள் தாய் நாடு
இஸ்லாம் எங்கள் வழிபாடு
தமிழே எங்கள் மொழியாகும்
தன்மானம் எங்கள் உயிராகும்
யாரடா சொன்னது நம்மை அந்நியன் என்று யாரடா சொன்னது’ ... ஹனிபா குரலில் உருவான இந்தப் பாடல் இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமிய சகோதரர்களின் பங்களிப்பு குறித்து பேசுகிறது.
நான்கு அல்லது ஐந்து இசைக் கலைஞர்களோடு சென்று ஒரே ஆளாக 4 மணிநேரத்துக்கு மேல் பாடக் கூடியவர் ஹனிபா. தற்போதுள்ள பாடகர்களால் அதை செய்ய முடியுமா என்பது சந்தேகம்? சினிமாவிலும் நாகூர் ஹனிபா ஒரு சில பாடல்கள் பாடியிருக்கிறார். அவரின் தனித்துவமான குரலில் உருவான அந்தப் பாடல்கள் அத்தனையும் சூப்பர் ஹிட்.விஸ்வாநாதன் - ராமமூர்த்தி இசையமைப்பில் உருவான சொர்க்கவாசல், குலேபகாவலி, பாவ மன்னிப்பு ஆகிய படங்களில் ஹனிபா பாடியிருக்கிறார். நாயகமே நபி நாயகமே, எல்லோரும் கொண்டோடுவோம் ஆகிய பாடல்கள் மிகவும் பிரபலம்.
1970ஆம் ஆண்டு ’தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு’ எனும் இஸ்லாமிய பாடலை ஹனிபா குரலில் பதிவு செய்த ராசய்யா எனும் இசையமைப்பாளர், பின்னாளில் நாடு போற்றும் இளையராஜாவாக மாறிய பின்பு ‘செம்பருத்தி’ படத்தில் அவரை மீண்டும் பாட வைத்தார். ’கடலிலே தனிமையிலே’ என்ற அந்தப் பாடல், காதல் தோல்வியுற்றவர்களின் இதயங்களை கசிந்துருகச் செய்தது. அதேபோல் பாலு மகேந்திரா - இளையராஜா காம்போவில் உருவான ‘ராமன் அப்துல்லா’ படத்தில் ஹனிபா பாடிய ‘உன் மதமா.. என் மதமா.. ஆண்டவன் எந்த மதம்’ என்ற பாடலும் மிகவும் பிரபலம்.
திரைப்பட பாடல்களைக் காட்டிலும், அவர் திராவிடத்தின் குரலாக ஒலித்ததே அதிகம். திமுகவில் இருந்த ஹனிபா, தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றிருக்கலாம். ஆனால் அவரின் காந்தக் குரல் ஏற்படுத்திய தாக்கத்தால் திமுக பக்கம் ஈர்க்கப்பட்டவர்கள் ஏராளம். திராவிடத்தைப் பரப்பிய காந்தக் குரலோன் நினைவு தினம் இன்று...