சென்னை தி நகரில் உள்ள தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் எல். முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "அம்பேத்கரின் 125ஆவது பிறந்தநாளை ஒரு வருடம் முழுவதும் கொண்டாடிய அரசு, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுதான். அம்பேத்கர் பிறந்த இடம், வாழ்ந்த இடம், மறைந்த இடம் உள்ளிட்ட ஐந்து இடங்களை அரசுடமையாக மாற்றியது பாஜக அரசுதான். அம்பேத்கர் குறித்த பல விஷயங்களை காங்கிரஸ் மறைத்து வைத்ததை வெளிக்கொண்டு வந்ததும் பாஜக அரசுதான்.
மேலும், மதுரையில் பாஜகவினர் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றபோது. விசிக குண்டர்கள் தாக்கியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இச்சம்பவத்தில் ஈடுபட்ட விசிக குண்டர்கள் மீது காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பேன்
எந்த இடத்தில் அம்பேத்கர் சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவிப்பதை தடுத்தார்களோ. அதே இடத்தில் மீண்டும் நாளை நான் சென்று மாலை அணிவிக்க உள்ளேன்.
அரக்கோணம் கொலை சம்பவத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இச்சம்பவத்தை திமுகவும், விசிகவும் அரசியலாக்குகின்றனர். தற்போது திமுகவின் முழு கைப்பாவையாக விசிக மாறிவிட்டது. இக்கொலை சம்பவத்தை சாதி கலவரமாக மாற்ற இவர்கள் முயல்கின்றனர்.
"ஏன் பெரியார் சாலை என பெயர் மாற்றம் செய்யவில்லை"
மேலும், பெரியார் சாலையின் பெயரை மாற்றியதற்கும், பாஜகவிற்கும் சம்பந்தமே இல்லை. இது முழுக்க முழுக்க அரசின் ஆவணங்கள் தொடர்பான ஒன்று. இதில் நான் கருத்து சொல்ல முடியாது. திமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறை ஆவணங்களில் ஏன் பெரியார் சாலை என பெயர் மாற்றம் செய்யவில்லை" என்றும் கேள்வி எழுப்பினார்.