சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் 16ஆவது அகில இந்திய மாநாடு சென்னையில் 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இம்மாநாட்டின் சிறப்பு அழைப்பாளராக, தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பேர்க்கைச் சேர்ந்த, மைக்கேல் மஸ்வாண்ட்லோ மக்வியா அழைக்கப்பட்டிருந்தார். 1945ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட உலக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான WFTU-இன் தற்போதைய தலைவராகவும் இவர் பதவி வகித்துவருகிறார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மஸ்வாண்ட்லோ, ”சி.ஐ.டி.யு. அகில இந்திய மாநாட்டின் ஏற்பாடுகள் பிரம்மாண்டமானதாக இருந்தது. உலகளவிலான பொது விவகாரங்கள் குறித்து இங்கு விவாதிக்கப்படுகிறது. பெண்களைக் குறைத்து மதிப்பிடுகின்ற இந்தத் தேசத்தில், சி.ஐ.டி.யு. பெண்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுத்துள்ளது. முதலாளித்துவமும் அதன் காட்டுமிராண்டித்தனமும் உலகெங்கும் பரவிக்கொண்டுள்ளது.
உலகிலுள்ள வளங்கள் அனைத்தையும் தனதாக்கிக்கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் அமெரிக்கா, உலகம் முழுவதும் மூன்றாம் உலகப்போரை நடத்திவருகிறது. அவை ஈராக், சிரியா என தொடர்கிறது. இதனால் பாதிக்கப்படுவது சாதாரண மக்கள்தான். தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான வன்முறையை, பொதுமக்களும் இணைந்து எதிர்கொள்ள தயாராக வேண்டும்.
உரிமைகள், எதிர்காலம், ஜனநாயகம் என எதைப் பற்றியும் மக்கள் சிந்தித்துவிடக் கூடாது என்பதற்காகவே, மக்கள் மத்தியில் சாதிகள், மதங்கள் மூலம் வன்முறையைத் தூண்டுகின்றனர். இதனைப் புரிந்துகொண்டு மக்கள் ஒன்றிணைந்து இந்த அவலங்களை வென்றாக வேண்டும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: ‘பழங்குடியினருக்குத் தெரியாமலேயே மனித நேய வார விழா’ - சமூக ஆர்வலர் கருத்து