சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் திருச்சிற்றம்பலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் டைடல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும் என வரவு-செலவுத் திட்ட அறிக்கை தாக்கலில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
அப்போது அவர், “நிதி நுட்பத் துறை வளர்ச்சிக்கு தமிழ்நாட்டில் மாபெரும் வாய்ப்புகள் உள்ளன. அதனை முன்னெடுக்கும் வகையில் நிதி நுட்ப கொள்கை ஒன்று வெளியிடப்படும். மேலும் வழிகாட்டி நிறுவனத்தில் இதற்கென பிரத்யேகமாக நிதி நுட்பப் பிரிவு ஒன்று அமைக்கப்பட்டு, நிதி நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும்.
சென்னையில் இரண்டு கட்டங்களாக நந்தம்பாக்கம், காவனூரில் நிதி நுட்ப நகரம் அமைக்கப்படும். முதல்கட்டமாக நந்தம்பாக்கத்தில் 165 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
பழைய மாமல்லபுரம் சாலை தகவல் தொழில்நுட்பத் துறை பெருவழியாக வளர்ச்சியடைவதற்கு 2000ஆவது ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தொடங்கிய டைடல் தொழில்நுட்ப பூங்கா முக்கியக் காரணமாகும். இப்போது தமிழ்நாட்டில் இரண்டு, மூன்றாவது நிலை நகரங்களில் தொழில் டைடல் தொழில்நுட்ப பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக விழுப்புரம் மாவட்டத்தில் திருச்சிற்றம்பலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் டைடல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட் : எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டுக்கு ரூ. 3 கோடி