மருத்துவ மேற்படிப்புக்கு தொலைதூர, கடினமான மற்றும் ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு சலுகை மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மூளைச்சாவு பராமரிப்பு மைய முதுநிலை நிபுணராக பணியாற்றிவரும் மருத்துவர் ஜி.பி.அருள்ராஜ், தனக்கு சலுகை மதிப்பெண்கள் வழங்கி கலந்தாய்வுக்கு அனுமதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும், சலுகை மதிப்பெண்கள் வழங்கப்படாததால் மருத்துவ மேற்படிப்பில் சேர முடியாத நிலை உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், 24 மணி நேரமும் கடினமான பணியை மேற்கொள்ளும் அனைத்து மருத்துவர்களுக்கும் சலுகை மதிப்பெண்கள் அளிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.செல்வம் தலைமையிலானக் குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளதையும் மனுவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வழக்கை, காணொலிக் காட்சி மூலம் விசாரித்த நீதிபதி எம்.சுந்தர், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து மே 18 =ஆம் தேதிக்குள் முடிவெடுக்க மருத்துவத் தேர்வுக் குழுவுக்கு உத்தரவிட்டார்.
மேலும், மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தகுதிப் பட்டியலை ஜூன் எட்டாம் தேதிவரை வெளியிடாமல் நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அனைத்து நீதிபதிகள் கூட்டம் - பதிவாளருக்கு தலைமை நீதிபதி உத்தரவு