சென்னை ஊனமாஞ்சேரியில் தமிழ்நாடு காவல் துறை அகாதமி செயல்பட்டுவருகிறது. 2008ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அகாதமியில் நேரடியாகக் காவல் உதவி ஆய்வாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், உதவி ஆய்வாளர்களாகப் பதவி உயர்வு பெறுபவர்கள், குரூப்-1 தேர்வுமூலம் காவல் துணை கண்காணிப்பாளர்களாகத் தேர்வுசெய்யப்படுபவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
மேலும் ஐபிஎஸ் தேர்வு முடிந்து வருபவர்களுக்கும், சுங்கத் துறை-அமலாக்கப்பிரிவு அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை கூடுதல் டிஜிபி அந்தஸ்து அலுவலரின் தலைமையில், காவல் பயிற்சிக் கல்லூரி டிஜிபிக்கு கீழ் தமிழ்நாடு காவல் துறை அகாதமி செயல்பட்டுவந்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு காவல் துறை அகாதமியை காவல் பயிற்சிக் கல்லூரிக்குக் கீழ் இயங்காமல், தனி அதிகாரத்துடன் இயங்க தமிழ்நாடு அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்குப் புதிய இயக்குநராகத் தமிழ்நாடு காவல் துறை அகாதமியின் திட்ட அலுவலராக இருந்த கூடுதல் டிஜிபி அம்ரேஷ் புஜாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல ஐஜி பதவியில் உள்ளவர் கூடுதல் இயக்குநராகவும், டிஐஜி பதவியில் உள்ளவர் இணை இயக்குநராகவும், காவல் கண்காணிப்பாளர் பதவியில் உள்ளவர்கள் துணை இயக்குனராகவும் அழைக்கப்படுவர்.
இதையும் படிங்க: வீடுகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடலாம்: தமிழ்நாடு அரசு