சென்னை: இந்திய வரலாற்று மற்றும் ஆராய்ச்சி கூட்டமைப்பின் சார்பில் நடைபெறும் 29 ஆவது மாநாட்டினை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்து, மாநாட்டு மலரை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், "கலை சார்ந்த வரலாறுகளை பாதுகாப்பது குறித்த சிந்தனைக்கு சி.பி.ராமசாமி ஐயர் அறக்கட்டளையை பாராட்டுகிறேன்.
தமிழில் அழகாக ஒன்று சொல்வார்கள், மீன் குஞ்சுக்கு நீந்த சொல்லித்தர வேண்டுமா? என்பது இவர்களுக்கு பொருந்தும். கலை வரலாறு சார்ந்த பதிப்புகளை நீண்ட காலமாக பாதுகாத்து வருகின்றனர். மேலும் நமது வரலாற்றை நாம் மறந்து விடக்கூடாது, வரலாறு வாழ்க்கையுடன் இணைந்து இருக்க வேண்டும்.
உலகின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் ஆராய்சியை சார்ந்தே இருக்கிறது. வளர்ச்சி குறித்த அனைத்துமே வரலாற்றின் பின்னணியை சார்ந்தே அமைந்து இருக்கிறது. நமது ஒவ்வொருவரின் கலாச்சாரம் தான் ஆன்மீகத்திற்கான வழி வகுக்கும். கலாச்சாரம், கட்டடக்கலை உள்ளிட்டவை சார்ந்த வரலாறுகளின் பின்னணியில் கூட, அவை ஆன்மீகத்தை சார்ந்தே தான் இருக்கிறது.
இந்திய பொருளாதாரம் தற்போது வளர்ச்சி அடைந்து வருகிறது. இதுபோன்ற கலை ஆராய்ச்சிகள் சார்ந்து தான் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அமைந்திருக்கிறது" என்றார்.
இந்த மாநாட்டில் இந்திய கலைகள் மற்றும் சிற்பங்களின் வடிவமைப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று இந்திய கலை வரலாறு சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கின்றனர். மேலும் பூம்புகார் சிலைகள், கைத்தறி ஆடைகள் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படாத வகையில் உருவாக்கப்பட்ட பயன்பாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவற்றை கண்காட்சியில் காட்சிப்படுத்தி உள்ளனர்.
இந்த மாநாட்டில் இந்திய வரலாற்று மற்றும் ஆராய்ச்சி கூட்டமைப்பின் சேர்மன் சக்கரவர்த்தி, செயலர் டாக்டர் சோமசேகரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி வளாகத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு