செங்கல்பட்டு: தாம்பரம் அடுத்த சமத்துவ பெரியார் நகரில் உள்ள தனியார் சர்வதேச பள்ளியில் மட்டைப்பந்து மற்றும் கைப்பந்து பயிற்சி களத்தை இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் இன்று (ஜூலை27) திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் மாணவ-மாணவியர்களின் கேள்விகளுக்கு அளித்த பதிலில், 'எந்த விளையாட்டுப் போட்டியாக இருந்தாலும் அதில் நூறு விழுக்காடு உழைப்பையும் ஆற்றலையும் செலுத்தி முழுமையாக ஈடுபடவேண்டும்' என்றார்.
மேலும் அவர், 'போட்டிகளில் வெற்றிபெற்று உடனடியாக நல்ல பலனை அடையவோ, ஒரு சில அணிகளில் சேர்வதற்காகவோ தகுதிபடுத்திக்கொள்ளும் நோக்கிலோ மிகுந்த அழுத்தத்தைத்திணித்துக் கொள்ளவேண்டாம். நீண்ட வெற்றியையும் பலனையும் அடையவேண்டுமென்றால் தொடர் பயிற்சியில் ஈடுபட்டு தினசரி பயின்று கொண்டே இருக்க வேண்டும்.
மேலும், தினசரி பயின்று கொண்டே இருப்பதால் நல்ல விளையாட்டு வீரராக மட்டுமில்லாமல், நல்ல மனிதராகவும் ஆக முடியும்' என்றார். இதனிடையே மாணவர்கள் சிலர் கிரிக்கெட் மட்டை மற்றும் பந்துகளில் அவரிடம் கையெழுத்துப் பெற்று மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: Exclusive: கல்லூரி இறுதியாண்டு மாணவர் தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் கேப்டனாக தேர்வு!