தீபாவளி பண்டிகை நாளை (நவம்பர் 14) கொண்டாட இருப்பதால் சென்னையிலிருந்து வெளி மாநிலம், வெளி மாவட்டங்களுக்கு இன்று (நவம்பர் 13) 100 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதில், 11,500 போ் பயணிக்கின்றனர். அதேபோல் வெளி மாநிலம், மாவட்டங்களிலிருந்து 100 விமானங்கள் சென்னைக்கு வருகின்றன. அதில், 9 ஆயிரம் பேர் பயணிக்கின்றனர். இன்று ஒரே நாளில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து 200 விமானங்களில் 20,500 பேர் பயணிக்கின்றனர்.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, சென்னை உள்நாட்டு விமான நிலையதில் இன்றுதான் பயணிகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை அதிகப்பட்சம் 15 ஆயிரத்திலிருந்து 16 ஆயிரம் வரைதான் இருந்தது. எட்டு மாத இடைவெளிக்கு பிறகு, சென்னை உள்நாட்டு விமான நிலையம் மீண்டும் களைகட்ட தொடங்கியுள்ளது.
சென்னையிலிருந்து அதிகபட்சமாக கொல்கத்தாவுக்கு இன்று 7 விமானங்களில் 1,370 பேர் பயணிக்கின்றனர். அதற்கு அடுத்து, டெல்லிக்கு ஒன்பது விமானங்களில் 1,100 பேர் செல்கின்றனர். ஹைதராபாத்துக்கு 10 விமானங்களில் 960 பேர் பயணிக்கின்றனர். கோயம்புத்தூருக்கு நான்கு விமானங்களில் 710 பேரும், மதுரைக்கு நான்கு விமானங்களில் 690 பேரும், பெங்களூருவுக்கு ஏழு விமானங்களில் 360 பேரும் செல்கின்றனர்.
சிறிய ரக விமானங்களான தூத்துக்குடி செல்லும் மூன்று விமானங்கள், திருச்சி செல்லும் இரண்டு விமானங்கள், சேலம் செல்லும் ஒரு விமானம் ஆகியவற்றிலும் பயணிகளின் கூட்டம் நிரம்பியுள்ளது. அதேபோல் டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து சென்னை வரும் விமானங்களிலும் பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது.