சென்னை: பிரபல சினிமா தயாரிப்பாளர்களான அன்புச்செழியன், கலைப்புலி எஸ். தாணு, எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா, லட்சுமண குமார், எஸ்.பிலிம்ஸ் சீனிவாசன் மற்றும் தியாகராஜன் ஆகியோருக்குச்சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
'கோபுரம்' ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருபவரும், பைனான்சியருமான அன்புச்செழியனுக்குச்சொந்தமான சென்னை தியாகராய நகர் ராகவைய்யா தெருவில் அமைந்துள்ள தயாரிப்பு நிறுவன அலுவலகம், அதே சாலையில் உள்ள அன்புச்செழியன் இல்லம், நுங்கம்பாக்கம் காம்தார் தெருவில் உள்ள அன்புசெழியனின் உறவினர் வீடு, மதுரையில் உள்ள வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
'கோபுரம்' பிலிம்ஸ் தமிழில் மருது, தங்கமகன் போன்ற படங்களைத் தயாரித்துள்ளது. மேலும் சமீபத்தில் வெளியான 'தி லெஜெண்ட்' திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
அதேபோல கலைப்புலி எஸ். தாணு அசுரன், கபாலி, கர்ணன் உள்ளிட்டப்படங்களை தயாரித்துள்ளார். மேலும் தற்போது சூர்யா நடிக்கும் ’வாடி வாசல்’ மற்றும் தனுஷ் நடிக்கும் ’நானே வருவேன்’ போன்ற படங்களைத்தயாரித்து வரும், கலைப்புலி.எஸ். தாணுவிற்குச்சொந்தமான தியாகராய நகர் பிரகாசம் சாலையில் உள்ள தயாரிப்பு நிறுவன அலுவலகம், ஆர்.ஏ.புரம் அவனியில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையின் சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் எஸ்.ஆர்.பிரபுக்குச்சொந்தமான தியாகராய நகர் தணிகாசலம் பகுதியில் அமைந்துள்ள தயாரிப்பு நிறுவனத்திலும் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. இவர், 'தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, அருவி' போன்ற படங்களைத்தயாரித்துள்ளார். சில நாட்களுக்கு முன் வெளியாகி பெரும் ஹிட் அடித்த கேஜிஎஃப் 2 திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டார்.
இவர்களைத்தொடர்ந்து, அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தை தயாரித்த மற்றும் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'கேப்டன் மில்லர்' படத்தைத் தயாரித்து வரும், தியாகராஜனின் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் அமைந்துள்ள ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையிலும் வருமான வரித்துறையின் சோதனை நடந்து வருகிறது.
மேலும், சென்னை தியாகராய நகர் தணிகாசலம் சாலையில் உள்ள ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இல்லத்திலும் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவர் ’பருத்திவீரன், மகாமுனி’ போன்ற படங்களைத் தயாரித்துள்ளார். தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படத்தை தயாரித்து வருகிறார்.
அதன்தொடர்ச்சியாக சூர்யா நடிப்பில் வெளிவந்த சிங்கம் 2 மற்றும் நடிகர் கார்த்தியை வைத்து ‘தேவ்’ என்ற படத்தையும் கார்த்தி தற்போது நடித்து வரும் 'சர்தார்’ படத்தையும் தயாரித்த லட்சுமணன் குமாருக்குச் சொந்தமான சென்னை தியாகராயநகர் கிரசன் பார்க் பகுதியில் உள்ள ப்ரெண்ட்ஸ் பிக்சர் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் பத்திற்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வட ஆற்காடு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தலைவரும், வேலூரில் "எஸ்.பிலிம்ஸ்" என்ற பெயரில் சினிமா விநியோகம் செய்து வருபவரும் தொழிலதிபர், சீனிவாசன். சென்னை அண்ணா சாலையில் உள்ள அவருடைய பிரபல உணவக வளாகத்தில் உள்ள அலுவலகம் மற்றும் கிருஷ்ணா நகர்ப்பகுதியில் உள்ள அவரது வீடு ஆகிய இடங்களில் இன்று காலை முதல் சென்னையைச்சேர்ந்த வருமான வரித்துறை அலுவலர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர். சுமார் 3 மணி நேர சோதனைக்குப்பின்பு சில ஆவணங்களை எடுத்துள்ளதாகவும்; மேலும் சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக சினிமா படத்தயாரிப்பாளர்களை குறிவைத்து நடைபெற்று வரும் இந்தச்சோதனையானது வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் நடைபெறுவதாக வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
தயாரிப்பு நிறுவனம் திரைப்படங்களில் முதலீடு செய்தது தொடர்பாகவும், படத்தின் வசூல் கணக்கு வழக்குகள் குறித்தும் ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
இது தவிர ரொக்கப்பணம் அதிகம் புழங்கும் இடமாக திரைத்துறை விளங்குவதால் கணக்கில் காட்டப்படாத ரொக்கப்பணம் குறித்தும் வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சோதனை நடைபெற்று வரும் ஓரிரு இடங்களில் பணம் எண்ணும் இயந்திரங்களையும் வருமான வரித்துறை அலுவலர்கள் எடுத்துச்சென்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் இச்சோதனையின் முடிவிலேயே கணக்கில் காட்டப்படாத பணம் பறிமுதல் செய்தது தொடர்பாகவும், பறிமுதல் செய்த ஆவணங்கள் குறித்தும் தகவல் தெரிவிக்கப்படும் என வருமான வரித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: விரைவில் வருகிறதா 'துருவ நட்சத்திரம்'? அப்டேட் கொடுத்த கௌதம் மேனன்