தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் 'சதிர் 10,000' என்ற தலைப்பில் பத்தாயிரம் மாணவிகள் ஒரே இடத்தில் பரதநாட்டியம் ஆடி, கின்னஸ் சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி சென்னை தாம்பரம் அடுத்த கௌரிவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
கின்னஸ் நடுவர் சோபியா கலந்து கொண்டு பரதநாட்டிய கின்னஸ் சாதனையை நேரடியாகப் பார்வையிட்டார். இதில் சிறப்பு விருந்தினராக சுற்றுலாத்துறை இயக்குநர் அமுதவல்லி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
2019ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி சிதம்பரத்தில் 7ஆயிரத்து 190 பேர் கலந்து கொண்டு ஒரே இடத்தில் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடத்தியதே, இதுவரை கின்னஸ் உலக சாதனையாக நீடித்து வந்தது.
அந்த சாதனையை முறியடிக்கும் வகையில் நேற்று தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் பத்தாயிரம் பேர் கலந்து கொண்ட பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை புதிய கின்னஸ் உலக சாதனையாக புத்தகத்தில் பதிவு செய்து, சான்றிதழை கின்னஸ் நடுவர் சோப்பியா வழங்கினார். இதில் கலந்துகொண்ட மாணவிகள் இந்த கின்னஸ் சாதனை படைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பரதநாட்டியம் ஆடி அசத்தும் 'தலைவி' கங்கனா - புகைப்படம் வெளியிட்ட ரங்கோலி