ஹைதராபாத்: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்றிரவு தொடங்க வாய்ப்பு, சென்னையில் 40 இடங்களில் பட்டாசு விற்பனை, சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்துக்கு தாதாசாகேப் பால்கே விருது, கட்டடவியல் கல்லூரி தரவரிசை வெளியீடு, தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு, துணை மருத்துவ படிப்பு விண்ணப்பம், வாரணாசியில் மருத்துவக் கல்லூரிகளை திறந்துவைக்கும் பிரதமர் நரேந்திர மோடி என இன்றைய முக்கிய நிகழ்வுகள், செய்திகளின் சுருக்கம் இதோ.
- வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி: பிரதமர் நரேந்திர மோடி, தனது சொந்த தொகுதியான உத்தரப் பிரதேசத்தின் வாரணாசிக்கு திங்கள்கிழமை (அக்.25) செல்கிறார். தொடர்ந்து, பிரதமரின் தற்சார்பு இந்தியா ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் ரூ.5,200 கோடி திட்ட மதிப்பீட்டில் 9 கல்லூரிகளை அவர் திறந்துவைக்கிறார்.
- ரஜினிகாந்த்துக்கு தாதாசாகேப் பால்கே விருது: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று (திங்கள்கிழமை) தாதாசாகேப் பால்கே (வாழ்நாள் சாதனையாளர்) விருதை பெறுகிறார். டெல்லியில் நடைபெறும் 57ஆவது தேசிய திரைப்பட விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. இந்த விழாவில் சிறந்த நடிகர் விருது தனுஷ் (அசூரன்), துணை நடிகர் விஜய் சேதுபதி (சூப்பர் டீலக்ஸ்), சிறந்த இசை (விஸ்வாசம்), சிறப்பு விருது பார்த்திபன் (ஒத்த செருப்பு) உள்ளிட்ட தமிழ் நட்சத்திரங்களும் விருது பெறுகின்றனர்.
- துணை மருத்துவ படிப்புகள் விண்ணப்பம்: பி.எஸ்.சி., நர்சிங்., பி.பார்ம் உள்ளிட்ட 19 துணை மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு இன்று (திங்கள்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. நவம்பர் 8ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
- தொழிலாளர்கள் போராட்டம்: தமிழ்நாடு அரசின் தன்னிச்சையான போனஸ் அறிவிப்புக்கு போக்குவரத்து, மின்சார தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதைக் கண்டித்து திங்கள்கிழமை (அக்.25) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளன.
- சென்னையில் பட்டாசு விற்பனை: சென்னையில் பட்டாசு விற்பனை இன்று (திங்கள்கிழமை) முதல் 40 இடங்களில் நடைபெறுகிறது. இதேபோல் மாநிலம் முழுவதும் கூட்டுறவுச் சங்கங்கள் சார்பில் மாவட்டந்தோறும் 10 பட்டாசு கடைகள் திறக்கப்படுகின்றன.
- கட்டடவியல் கல்லூரி தரவரிசை வெளியீடு: தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 51 கட்டடவியல் கல்லூரிகள் செயல்பட்டுவருகின்றன. இந்தக் கல்லூரிகளில் கட்டட அமைப்பியல் (பி.ஆர்க்) படிப்புக்கு தரவரிசை இன்று (திங்கள்கிழமை) வெளியாகிறது. மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அக்.27 தொடங்கி நவ.2ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
- வடகிழக்கு பருவமழை சாதகம்: தமிழ்நாட்டில் திங்கள்கிழமை (அக்.25) இரவு முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல்கள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : நல்ல நேரம் யாருக்கு🕕 - அக்டோபர் 25