ஹைதராபாத்: சபரிமலையில் ஐயப்பன் தரசினம், உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி தொடக்கம், அதிமுக பொன்விழா, ஜெய்சங்கர் இஸ்ரேல் பயணம், கர்நாடக இடைத்தேர்தல் பரப்புரை, தமிழ்நாட்டில் மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்பு என இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் சுருக்கம் இதோ.
- உலக கோப்பை தொடக்கம்: ஐசிசியின் 7ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஞாயிற்றுக்கிழமை (அக்.17) தொடங்குகிறது. இந்தத் தொடரானது நவம்பர் 14ஆம் தேதி இறுதி ஆட்டத்துடன் நிறைவடையும்.
- அதிமுக பொன்விழா: திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கி 49 ஆண்டுகள் நிறைவடைந்து 50ஆம் ஆண்டு பொன்விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதையடுத்து எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் மரியாதை செலுத்துகின்றனர். பின்னர் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொடியேற்றி இனிப்புகள் வழங்குகின்றனர்.
- சபரிமலையில் ஐயப்பன் தரசினம்: ஐப்பசி மாத பிறப்பையொட்டி சபரிமலை ஐயப்பன் சுவாமி கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை (அக்.17) முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். பக்தர்கள் தரிசனத்துக்கு வருகிற 21ஆம் தேதி வரை அனுமதிக்கப்படுவார்கள்.
- ஜெய்சங்கர் இஸ்ரேல் பயணம்: வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் 5 நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை (அக்.17) இஸ்ரேல் செல்கிறார்.
- தடுப்பூசி முகாம் கிடையாது: தமிழ்நாட்டில் இன்று கரோனா தடுப்பூசி முகாம் கிடையாது என மக்கள் நல்வாழ்வு துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
- கர்நாடக இடைத்தேர்தல் பரப்புரை: கர்நாடக மாநிலத்தில் சிந்தகி, ஹானகல் உள்ளிட்ட சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்.30 இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அங்கு பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று, பி.எஸ் எடியூரப்பா, முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஆகியோர் பரப்புரை மேற்கொள்கின்றனர்.
- தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு: தமிழ்நாட்டில் மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, தென்காசி, திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர், நாமக்கல், புதுக்கோட்டை, கடலூர், சேலம், ஈரோடு, பெரம்பலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது.
இதையும் படிங்க : துலாமில் சஞ்சரிக்கும் சூரியனால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்?