'விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டும், தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களின் டெல்டா பகுதிகள் "பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக" மாற்றப்படும், காவிரி டெல்டா பகுதிகளை "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக" செயல்படுத்த சட்ட வல்லுநர்களை கலந்தாலோசித்து இதற்கான ஒரு தனிச்சட்டம் இயற்றிட ஜெயலலிதா அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை தொடங்க இவ்வரசு எப்போதும் அனுமதி அளிக்காது' என்ற அறிவிப்பை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.
காவிரி டெல்டா விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை, பல்வேறு அரசியல் தலைவர்கள், சூழியல் ஆர்வளர்கள் என பலரும் பல ஆண்டுகளாக வலியுறுத்திவந்தனர். முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு பலரும் தொடர்ச்சியாக தனது வரவேற்பை வழங்கிவருகின்றனர். அதிமுக கூட்டணியைச் சேர்ந்த பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த முடிவு முதலமைச்சரின் துணிச்சலை வெளிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் தமாகா தலைவர் ஜி.கே. வாசன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், அமமுக பொதுச் செயலாளர் தினகரன், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் வரவேற்றுள்ளனர்.
இதன் மூலம் டெல்டா பகுதிகளில், வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் வேளாண்மை, அதன் சார்ந்த தொழில்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். மேலும், வேளாண்மையை அழிக்கும் விதமான எந்த விதமான திட்டங்களோ, தொழில்களோ இந்த பகுதியில் அனுமதிக்கப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே காவிரி வேளாண்மண்டல பாசனபகுதி சுருங்கி வரும் நிலையில் இந்த அறிவிப்பு மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.