சென்னை: சென்னையில் 37 பள்ளிகளில் 5,941 மாணவ - மாணவியருக்கு முதல்கட்டமாக காலை இலவச சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் பிறந்தநாளான வரும் செப்.15 ஆம் தேதி, "காலை இலவச சிற்றுண்டி" திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைக்க உள்ளார். சென்னை உட்பட 14 மாநகராட்சிகளில் 318 பள்ளிகளில் 37,740 மாணவ மாணவியர், மேலும் 23 நகராட்சிகளில் அமைந்துள்ள 163 பள்ளிகளில் 17,427 மாணவ - மாணவியர் என தமிழ்நாடு முழுவதும் 1.14 லட்சம் மாணவர்களிடம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரையில் வரும் 16ஆம் தேதி முதல் இந்த காலை இலவச சிற்றுண்டி திட்டம் அமலுக்கு வர உள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் 37 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான 5941 மாணவ மாணவியருக்கு முதல் கட்டமாக, சிற்றுண்டி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், காலை இலவச சிற்றுண்டி திட்டத்திற்காக சென்னை மாநகராட்சி சார்பாக மாநகரட்சி வடக்கு வட்டாரத்திற்கு உட்பட்ட 4 மண்டலங்களில், 6 இடங்களில் பொது சமையல் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட கொடுங்கையூர் ராஜரத்தினம் நகர், ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ. நகர், திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட எஸ்என் செட்டி தெரு, எண்ணூர் அன்னை சிவகாமி நகர், எண்ணூர் தாழங்குப்பம் நிவாரண மையம் உள்ளிட்ட 6 இடங்களில் பொது சமையல் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ஓய்வுபெற்ற என்ஆர்ஐக்களுக்கான பல்வேறு காப்பீட்டுத் திட்டங்கள்