சவூதி அரேபியாவின் மறைந்த இளவரசர் சுல்தான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத், கடந்த 2002ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி, சர்வதேச அறிவியல் விருதைத் தொடங்கினார். இந்த விருது ஆண்டுக்கு இருமுறை வழங்கப்படுகிறது.
இந்த விருது பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு சுமார் 2 கோடி ரூபாய், தங்கப் பதக்கம், கோப்பை மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில், சர்வதேச அறிவியல் விருதின்கீழ் வழங்கப்படும், "இளவரசர் சுல்தான் பின் அப்துல் அஜிஸ் சர்வதேச தண்ணீர் விருது" சென்னை ஐஐடி பேராசிரியர் தாலப்பில் பிரதீப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் தொடர்பான ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் கிரியேட்டிவிட்டி பிரிவில், இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் தாலப்பில் பிரதீப்பின் ஆராய்ச்சிக்குழு, சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில், குடிநீரில் இருந்து ஆர்சனிக்கை விரைவாகவும், மலிவு விலையிலும் அகற்றும் நானோ அளவிலான பொருட்களை உருவாக்கியதற்காக 'இந்த விருது' வழங்கப்படுகிறது.
இதற்கான விருது வழங்கும் விழா, செப்டம்பர் 12ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. இதில், பேராசிரியர் தலாப்பில் பிரதீப் மற்றும் அவரது குழு உறுப்பினர்கள் அவுலா அனில் குமார், சென்னு சுதாகர், ஸ்ரீதாமா முகர்ஜி, அன்ஷூப் மற்றும் மோகன் உதயசங்கர் ஆகியோருக்கு விருது வழங்கப்படவுள்ளது.