சென்னை: ஓட்டேரி ஏகாங்கிபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதி ரமேஷ் (46) - வாணி (41). இவர்களுக்கு 2005ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ரமேஷ் பூந்தமல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். இவர்களுக்கு கௌதம் (15), ஹரிஷ் (12) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
மதுவிற்கு அடிமையான ரமேஷ் குடித்துவிட்டு, மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை (டிசம்பர் 20) இருவருக்கும் சண்டை ஏற்பட்டு, அன்றிரவு 11 மணியளவில் ரமேஷ் தனது துணிகளை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார்.
கொலையின் பின்னணி என்ன?
அப்போது, ரமேஷின் மூத்த மகனான கௌதம் 'அம்மா எங்கே?' என்று அவரிடம் கேட்டபோது, 'அம்மா வேறொருவருடன் ஓடிப் போய்விட்டார்' என்று கூறிச் சென்றுள்ளார்.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 21) முழுவதும் வாணியின் மகன்கள் தனது தாயைத் தேடியுள்ளனர். மேலும், 'தந்தையையும் காணவில்லை' என உறவினர்களிடத்தில் கூறியுள்ளனர். நேற்றிரவு (டிசம்பர் 22) கௌதம், ஹரிஷ், கௌதமின் நண்பர் என மூன்று பேர் மட்டுமே வீட்டில் உறங்கியுள்ளனர்.
இன்று (டிசம்பர் 23) காலை அவர்கள் எழுந்து பார்த்தபோது, தொலைக்காட்சிக்கு அடியிலுள்ள மேசைப் பகுதியிலிருந்து ரத்தம் வெளியேறுவதைக் கண்டுள்ளார்.
தலைமறைவான கணவர்
மேலும் லேசான துர்நாற்றமும் வந்ததையடுத்து, உடனடியாக இது குறித்து வீட்டின் கீழ்ப்பகுதியிலுள்ள வீட்டின் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளனர். இது குறித்து உடனடியாக வீட்டின் உரிமையாளர், ஓட்டேரி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.
தகவலின்பேரில் அங்கு வந்த காவலர்கள் தொலைக்காட்சி வைப்பதற்குப் பயன்படுத்தப்படும் மேசையின் அடியில் துணி மூட்டையைப் பிரித்துப் பார்த்தபோது, அதில் முகத்தில் பலத்த காயங்களுடன் வாணி இறந்துகிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக வாணியின் உடலைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்து ஓட்டேரி காவலர்கள் விசாரணை மேற்கொண்டும், தலைமறைவான ரமேஷை தேடியும் வருகின்றனர்.
இதையும் படிங்க: 'ஓடும் பேருந்தில் தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி!'