சென்னை: பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் அண்ணா நகரில் வசித்துவரும் தம்பதியர் அந்தோணி ராஜ் (45), ஞானசெலின் (40). இவர்கள் கடந்த 15 வருடங்களாக, சீட்டு பணம் தொழில் நடத்திவந்துள்ளனர்.
அந்தோணிராஜும் ஞானசெலினும் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து, 20 மாத சீட்டு பிடித்துள்ளனர். அதில் 10 லட்சம், 5 லட்சம், 2 லட்சம் மற்றும் 1 லட்சம் ரூபா என சீட்டுகளை பிடித்துள்ளனர். இந்த சீட்டிற்காக, இவர்களிடம் மொத்தம் 27 பேர், சுமார் ஒரு கோடியே 11 லட்சத்து 75 ரூபாய் பணத்தை சீட்டு பணமாக கட்டி உள்ளனர்.
சீட்டு கட்டி முடித்த பின்னர் பணத்தை கொடுப்பதாக கூறியதால் அனைவரும் மாதம் மாதம் பணத்தை கட்டி வந்துள்ளனர். சீட்டு 20 மாதம் முடிந்தவுடன், பணம் கட்டியவர்கள், அந்தோணிராஜ் மற்றும் அவர் மனைவியிடம் கட்டிய பணத்தை கேட்டபோது, அடுத்த மாதம் தருகிறேன், அடுத்த வாரம் தருகிறேன் என கூறி அலைக்கழித்து வந்துள்ளனர்.
இதனால், தங்களின் சீட்டு பணத்தை மோசடி செய்து விடுவார்களோ என்று அஞ்சி, சீட்டு கட்டியவர்கள் அந்தோணிராஜ் பற்றி விசாரித்தனர். இதில், வசூல் செய்த சீட்டு பணத்தில், மூன்று வீடுகள், 200 சவரன் தங்க நகை வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அந்தோணிராஜிடம் சென்று கேட்டபோது, இதைப் பற்றி காவல்துறையில் புகார் தெரிவித்தால், அனைவரையும் கூலிப்படையை வைத்து கொலை செய்துவிடுவேன் என மிரட்டி உள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி, கிண்டியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் அந்தோணிராஜ், அவரது மனைவியும் ஒரு வருடமாக கட்டிய சீட்டு பணத்தை மோசடி செய்து விட்டதாக புகார் அளித்துள்ளனர். ஆனால் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த சீட்டு பணம் கட்டி பாதிக்கப்பட்ட 27 பேரும், அந்தோணிராஜ் வீட்டை முற்றுகையிட்டு 1கோடியே 11லட்சத்து 75ஆயிரம் சீட்டு பணத்தை திருப்பித் தரும்படி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த சங்கர்நகர் காவல்துறையினரின் வாகனத்தையும், பாதிக்கபட்ட மக்கள் முற்றுகையிட்டு அந்தோணிராஜ் மற்றும் அவரது மனைவியும் கைது செய்து தங்கள் பணத்தை மீட்டு தரும்படி கோஷங்கள் எழுப்பினர். அதற்கு, பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுங்கள் என பாதிக்கப்பட்டவர்களிடம் சங்கர்நகர் போலீசார் கூறியுள்ளனர்.
பின்னர், பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அந்தோணிராஜ், அவரது மனைவி இருவரையும் கைது செய்து கிண்டியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பல லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்: பாதிக்கப்பட்டவர்கள் புகார்