சேலம் மாவட்டம் கடையாம்பட்டி தாலுகா தாத்தையாம்பட்டி கிராமத்த்தைச் சேர்ந்த இந்திய குடியரசு கட்சி மாநில செயல் தலைவர் கருமலை என்பவர், அக்கிராமத்திலுள்ள அரசு புறம்போக்கு நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றி, வீடில்லா ஏழை மக்களுக்கு ஒதுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றததில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குறிப்பிட்ட அந்த நிலம் பள்ளி கட்டடம் கட்ட ஒதுக்கக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு தாசில்தாரரால் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அனைவருக்கு வீடு வழங்க அரசுக்கு கோரிக்கை
இதை பதிவு செய்த நீதிபதிகள், “பல துறைகளில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அரசு வீடற்றவர்களுக்கு வீடுகளை வழங்க வேண்டும். அதேசமயம் அனைத்தும் இலவசமாக கிடைக்கும் என்ற எண்ணத்தை மக்களிடையே ஏற்படுத்தி விடக்கூடாது” என தெளிவுபடுத்தினர். வீட்டு மனை ஒதுக்கக் கோரி மீண்டும் புதிதாக மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்ப மனுதாரருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
அதேசமயம் தமிழ்நாடு முழுவதும் வீடற்ற ஏழை மக்களுக்கு நிலம் அல்லது வீடு வழங்குவது தொடர்பாக விரிவான செயல்திட்டத்தை அரசு வகுக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இதற்காக மாவட்ட வாரியாக நிலங்களை அடையாளம் காணவும் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: ’ஹெலிகாப்டர் பிரதர்ஸ் வழக்கில் திருப்தியில்லை’ - நீதிபதி சரமாரி கேள்வி