சென்னையை அடுத்து நொளம்பூர் அருகே உள்ள மதுரவாயல்-புழல் தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக நான்கு டன் அளவிற்கு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட நொறுக்கு தீனிகள் கொட்டப்பட்டிருந்தன.
இந்நிலையில், அவ்வழியாக வந்த சில வியாபாரிகள், சிறுவர்கள் இந்த பாக்கெட்டுகளை எடுத்துசென்றனர். இதையடுத்து அங்கிருந்த ஆடு, மாடுகள் அந்த நொறுக்கு தீனிகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தன.
இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் சோதனை மேற்கொண்டனர்.
அதில் சாலையில் கொட்டப்பட்ட நொறுக்குத் தீனிகள் அனைத்தும் கடந்த 2018 ஆம் ஆண்டே காலாவதியானது தெரியவந்தது.
இந்நிலையில், அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் உணவு பாதுக்காப்புத் துறை சோதனைக்கு பயந்து சட்டவிரோதமாக இரவு நேரத்தில் சாலையோரமாக இதனை கொட்டியிருக்கலாம் என தெரிகிறது.
இதனையடுத்து, காவல் துறையினர் அதனை தீயிட்டு கொளுத்தினர். தொடர்ந்து காலாவதியான உணவு பொருட்களை கொட்டி சென்றவர்கள் குறித்து விசாரணை நடந்துவருகிறது.