சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நேற்று (மார்ச்.22) சென்னையில் வெளியிட்டார். தொலைநோக்கு பத்திரம் என்ற பெயரில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியானது.
பாஜக தேர்தல் அறிக்கைக்கான தயாரிப்புக் குழு கடந்த ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. ஹெச்.ராஜா தலைமையிலான குழுவில் வி.பி.துரைச்சாமி, அண்ணாமலை, சீனிவாசன், கார்வேந்தன், சசிகலா புஷ்பா, நாச்சியப்பன் உள்ளிட்டோரும் இணைந்து தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளனர்.
இதற்காக, 12 ஆயிரம் இடங்களில் 4,500 பெட்டிகள் அமைக்கப்பட்டு, 60 எல்.இ.டி வாகனம் மூலமாக இரண்டு லட்சத்து 10 ஆயிரம் மக்களிடமும், மிஸ்டு கால் தொடர்பு மூலம் 1.2 லட்சம் மக்களிடமும் கருத்து கேட்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், விவசாய சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் மூலம் இத்தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
பாஜக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
- தரிசு நிலங்களில் பயிர் வளர்க்க மானியம் வழங்கப்படும்.
- விவசாய சோலார் பம்புசெட்டுகளுக்கு மானியம் வழங்கப்படும்.
- 50 லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
- விவசாயிகள் போன்று மீனவர்களுக்கும் 6,000 ரூபாய் ஊக்கதொகை வழங்கப்படும்.
- 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் மீட்டு பட்டியலின மக்களிடம் அளிக்கப்படும்.
- விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போடப்படும்.
- பூரண மதுவிலக்கு அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும்.
- ஆற்றுப்படுகையில் இருந்து மணல் அள்ளுவது தடை செய்யப்படும்.
- சட்டமேலவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- தமிழை வளர்க்கும் விதமாக திருக்குறள் மாலை பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- தென்னிந்தியாவில், தமிழ்நாட்டில் புதிய தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- இந்து கோயில் மீட்கப்பட்டு தனிவாரியம் மூலம் நிர்வகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- பசுக்களை பாதுகாக்க தனிச் சட்டம் இயற்றப்படும்.
- மதம் மாற்றுவது கிரிமினல் குற்றமாகக் கருதப்பட்டு, கட்டாய மத மாற்ற தடைச் சட்டம் கொண்டு வரப்படும்.
- மதக்கலவரங்கள் ஏற்படாமல் தடுக்க நீதிபதி வேணுகோபால் தலைமையிலான ஆணைகள் அமல்படுத்தப்படும்.
- கிராமப் பூசாரிகளுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 5,000 ரூபாய் வழங்கப்படும்.
- தமிழ்நாட்டில் அகதிகள் முகாமில் வாழும் தமிழ் மக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்.
- சென்னை மாநகராட்சி மூன்றாக பிரிக்கப்படும்.
- கூவம் ஆறு சீரமைப்படும்.
இதையும் படிங்க: Exclusive:'சிஏஏவை நீக்கினால் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கமுடியாது'- ஹெச். ராஜா