சென்னை: தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
91 பேர் பலி
கடந்த 4 நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு விபத்துகளில் சிக்கி, இதுவரை 91 பேர் பலியாகியுள்ளதாக வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் 7 பேர் பலி
சென்னையில் மட்டும் 7 பேர் கனமழை காரணமாக பலியாகியுள்ளனர். தண்டையார்பேட்டையில், வீட்டில் தேங்கியிருந்த மழை நீரில் வழுக்கி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்தார். அதேபோல, பேசின் பிரிட்ஜ் அருகே குட்டையில் விழுந்து ஜெயவேல் என்பவரும், ஓட்டேரி கால்வாய் மற்றும் அடையாறு ஆற்றில் மூழ்கி இருவரும் உயிரிழந்தனர். மேலும், மாதவரத்தில் மின்சாரம் தாக்கி ஒருவரும், ராயபுரத்தில் வீடு இடிந்து விழுந்து ஒருவரும் பலியாகியுள்ளனர்.
பேரிடர் மீட்புக் குழுக்கள்
இது குறித்து தேசிய பேரிடர் மீட்பு சீனியர் கமாண்டெண்ட் ரேகா நம்பியாரிடம் பேசிய போது, "தமிழ்நாட்டில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும், மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும், 10 தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் பாண்டிச்சேரியில் 2 குழுக்கள் வந்துள்ளதாக தெரிவித்தார்.
மீட்புப் பணிகள் தீவிரம்
பாதிக்கப்படக் கூடிய இடங்கள், பழைய கட்டிடங்கள் போன்றவற்றை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 4 நாட்களில் வெள்ளத்தில் சிக்கிய 4500 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: நாளை கனமழை; எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் தயார் - அமைச்சர் கே.என்.நேரு