சென்னையில் பெரும்பாலான இடங்களில் இன்று மதியம் முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் பல இடங்களில் நீர் தேங்கியும் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மவுண்ட் ரோடு, ராயப்பேட்டை, மயிலாப்பூர், கோயம்பேடு, விருகம்பாக்கம், சாலி கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அடையாறு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மழையின் காரணமாக கிண்டி முதல் கோயம்பேடு செல்லும் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் நம்மிடம் கூறுகையில், ஆந்திராவின் கடலோர பகுதிகளில் வீசிய காற்று இன்று முதல் திசை மாறியுள்ளது; இதனால் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டதால் சென்னையில் மழை பெய்ய தொடங்கியுள்ளது எனவும் இந்த மழையானது அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு நீடிக்கும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...