கடந்த சில வாரங்களாக சென்னையில் கரோனாவின் தாக்கம் குறைந்திருந்த நிலையில், ஐஐடியில் மாணவர்கள், பணியாளர்கள் என சுமார் 104 பேருக்கு நோய்தொற்றியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஐஐடி மாணவர்கள் சிகிச்சை பெறும் கிண்டி கிங்ஸ் இன்ஸ்டியூடில் இன்று அவர்களை நேரில் சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நலம் விசாரித்தார்.
பின்னர் ஐஐடிக்கும் சென்று ஆய்வு செய்தபின் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” ஐஐடியில் இதுவரை 444 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 87 மாணவர்கள், 16 உணவகப் பணியாளர்கள், வீட்டில் இருந்த ஒருவர் என மொத்தம் 104 பேருக்கு நோய்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் கிண்டி மருத்துவமனையில் 66 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐஐடி உணவுக்கூடங்கள் வழியாக நோய் தொற்று மேலும் பரவ வாய்ப்புள்ளது என்பதால் அவற்றை மூடியுள்ளோம்.
எஞ்சிய 399 மாணவர்களுக்கு சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. ஐஐடி வளாகத்தில் குடியிருப்போர் பாதுகாப்பாக இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த 9 ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. கல்லூரிகள் திறப்புக்குப்பிறகு மாணவர்கள் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என்ற தகவல் வந்த உடன், மாவட்ட ஆட்சியர்களுக்கு மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது “ எனத் தெரிவித்தார்.
சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூரத்தி கூறும்போது, ” சென்னை ஐஐடியில் கடந்த 4 மாதங்களாக மாணவர்கள் தங்கியுள்ளனர். அவர்கள் தனிமனித இடைவெளியை முழுமையாக கடைபிடிக்காததும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காததும் நோய் பரவலுக்கு காரணமாக அமைந்துள்ளது “ என்றார்.
இதையும் படிங்க: அம்மா மினி கிளீனிக் திட்டம்! - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!