ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 2 ஆயிரத்து 895 பள்ளிவாசல்களுக்கு 5 ஆயிரத்து 440 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து, இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடர்ந்தார்.
அதில், "ஊரடங்கு உத்தரவு காரணமாக பொது மக்களுக்கு அத்தியாவசியத் தேவையான அரிசி கிடைப்பது சிரமமாக இருக்கும் சூழலில், குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் அரிசி வழங்க முடிவெடுத்திருப்பது ஏற்கக் கூடியதாக இல்லை. மாநிலம் முழுவதும் அரிசி தேவை உள்ள அனைத்து மக்களுக்கும் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனுவை காணொலி மூலம் விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு,
மெக்காவுக்கு புனித பயணம் மேற்கொள்ள நிதியுதவி வழங்கியதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், 1947ஆம் ஆண்டில் பிரிவினைக்கு பின் இந்தியாவை இந்து நாடு என அறிவிக்காமல் மத சார்பற்ற நாடாக அறிவித்ததால், பல வேற்றுமை இருந்தாலும், மத சார்பற்ற கொள்கையில் இருந்து இந்தியா மாறுபடாமல் இருப்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
மேலும், மத ரீதியாக செயல்படும் அமைப்பின் சார்பில் பொது நலன் வழக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், அரசாணையை ரத்து செய்யும் கோரிக்கையை நிராகரித்தனர். இஸ்லாமியர்களுக்கு வழங்குவது போல அனைவருக்கும் அரிசி வழங்க வேண்டுமென்ற கோரிக்கை தொடர்பாக மட்டும் மே 7ஆம் தேதி தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.