போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்தை செல்லாது என அறிவிக்கக்கோரி, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், ” ஜெயலலிதா இறந்த பின் தங்களை வாரிசாக அறிவிக்கக்கோரி தானும், தனது சகோதரி தீபாவும் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், வேதா நிலையத்தையும், அங்குள்ள அசையும் சொத்துகளையும் அரசுடைமையாக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தனிநபர் சொத்துகளை கையகப்படுத்துவது தொடர்பாக அவசர சட்டம் பிறப்பிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகள் குறித்த உண்மை நிலையை தெரிந்து கொள்ளாமல் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதனால், வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி பிறப்பித்த அவசர சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும். நினைவில்லமாக மாற்ற தடை விதிக்க வேண்டும் ” என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.ஷாகி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண். அவசர சட்டத்திற்கு மாற்றாக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும், அரசிதழிலும் வெளியிடப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார். அதனால், இந்த வழக்கு செல்லத்தக்கது அல்ல என்பதால் சட்டத்தை எதிர்த்து மனுதாரர் வழக்கு தொடரலாம் என்றார்.
இதையடுத்து சட்டத்தை எதிர்த்து வழக்குத் தொடர தீபக் தரப்புக்கு அனுமதியளித்த தலைமை நீதிபதி அமர்வு, அவசர சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்தது.
இதையும் படிங்க: வருவாய்துறை புதிய கட்டடங்களை திறந்து வைத்த முதலமைச்சர்!