சென்னை: 2011ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட மடிப்பாக்கம் பகுதியில், பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தவில்லை என அய்யம்பெருமாள் என்பவர் 2019இல் பொதுநல வழக்குத் தாக்கல்செய்திருந்தார்.
அதில், 2016 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, சோழிங்கநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ், பாதாள சாக்கடை அமைப்பதாக வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால் நடைமுறைப்படுத்தவில்லை எனவும், அருகில் உள்ள புழுதிவாக்கம் பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்திருந்தார்.
அடுக்குமாடி கட்டடங்களில் உள்ள செப்டிக் டேங்குகள் நிரம்பி சாலைகளில் வடிவதால் நோய்த் தொற்று இடர் இருப்பதாகவும், பாதாள சாக்கடை அமைப்பது தொடர்பாக அனுப்பிய மனு மீது சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய நிர்வாக இயக்குநர் நடவடிக்கை எடுக்க குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயித்து நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கைவைத்திருந்தார்.
இந்த வழக்கில், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியம் தரப்பில், மடிப்பாக்கம் பகுதிக்கு 160 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் பாதாள சாக்கடை அமைப்பது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும், திட்ட அறிக்கை கிடைத்தவுடன், நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் கோரப்பட்டு பணிகள் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
டெண்டர் பணிகளை முடிக்க ஆறு மாதமும், அதன்பின்னர் 36 மாதங்களில் பணிகள் முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளை 2020ஆம் ஆண்டு டிசம்பருக்குள் முடிக்க வேண்டும் என 2019ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவுப்படி பணிகள் முடிக்கப்படவில்லை என கடந்த ஆண்டு அய்யம்பெருமாள் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தாக்கல்செய்யப்பட்ட அறிக்கையில் மடிப்பாக்கம் தொடர்பான வழக்கில் அந்தப் பகுதியைத் தவிர மற்ற பகுதிகள் தொடர்பான விவரங்கள் இடம்பெற்றிருப்பதாகவும், நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகும் மடிப்பாக்கத்தில் பணிகள் ஏதும் தொடங்கப்படாதது குறித்தும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
பணிகளை முடிக்க கூடுதல் கால அவகாசம் கூட கேட்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினர். எனவே நீதிமன்ற உத்தரவை அவமதித்தது உறுதியாவதாகத் தெரிவித்த நீதிபதிகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய நிர்வாக இயக்குநர், செயற் பொறியாளர் ஆகியோர் ஆஜராக உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 28ஆம் தேதி தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: பொருள்கள் மட்டுமல்ல; நீதியும் இனி ஆன்லைனில்தான்!