விசாகா குழு விசாரணைக்குத் தடை கோரிய மனு: அரசு பதிலளிக்க உத்தரவு - சிறப்பு டிஜிபி
பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்கும் விசாகா குழுவின் விசாரணை நடவடிக்கைக்குத் தடை விதிக்கக் கோரிய சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபியின் மனுவிற்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: பெண் காவல் கண்காணிப்பாளர் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, சிறப்பு டிஜிபி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீதான புகார் குறித்து விசாரிக்க, பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடுப்புச் சட்டப்படி, கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் ஐந்து பேர் அடங்கிய விசாகா குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு விசாரணையை முடித்து கடந்த ஏப்ரலில் அறிக்கை ஒன்றை, தமிழ்நாடு அரசுக்கு அளித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் சிறப்பு டிஜிபிக்கு எதிராக குற்றக் குறிப்பாணையும் வழங்கப்பட்டது.
சிறப்பு டிஜிபி மனு
இந்நிலையில், விசாகா குழுவின் விசாரணை நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ள கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், ஐஜி அருண் ஆகியோர் தனக்கு எதிராக ஒருதலைப்பட்சமாக செயல்படுவர் என்பதால் இருவரையும் நீக்கக் கோரி உள்துறை செயலருக்கு மனு அளித்தேன். அந்த மனு பரிசீலிக்கப்படும் முன்பே, விசாரணைக் குழு தனது விசாரணையைத் தொடங்கி விட்டது.
அறிக்கை வழங்கப்படவில்லை
இவ்வழக்கின் சாட்சிகள் பலரும், புகாரளித்த பெண் எஸ்.பி-க்கு கீழ் பணியாற்றுபவர்கள் என்பதால், அவரை இடமாற்றம் செய்யக்கோரினேன். அதுவும் ஏற்கப்படவில்லை. பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைத் தடுப்புச் சட்டப்படி இயற்கை நீதியைப் பின்பற்றி முறையாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி சரவணன் முன்பு இன்று (அக். 20) விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்பு டிஜிபி தரப்பில், "விசாகா கமிட்டி தனது விசாரணையை முடித்த 10 நாள்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அதன் அறிக்கையை வழங்க வேண்டும்.
நாளை மறுநாள் விசாரணை
ஆனால், இதுவரை எங்கள் தரப்புக்கு அறிக்கை வழங்கப்படவில்லை. இந்தக் குழுவை மாற்றியமைக்க கோரிக்கை விடுத்தும் அது பரிசீலிக்கபடவில்லை" என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை நாளை மறுநாளுக்கு (அக். 22) தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: கொலை செய்ய சொன்னாலும் செய்துவிடுவீர்களா...? - எஸ்.பியிடம் உயர் நீதிமன்றம் காட்டம்