கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால், ஏழை மக்களுக்கு உணவு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அரசியல் கட்சிகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் வழங்கி வந்தன. இவ்வாறு வழங்குவது 144 தடை உத்தரவுக்கு எதிரானது என்றும், மக்களுக்கு நேரடியாக உணவு, அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கவும் தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகளை விதித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், பாதிக்கப்பட்டுள்ள விளிம்பு நிலை மக்களுக்கும், தினக்கூலிகளுக்கும் உதவும் வகையில் உணவு, மளிகை மற்றும் மருந்துப் பொருட்களை வழங்கி வருவதாகவும், அப்போது சமூக இடைவெளி, முகக்கவசம், கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்தே உதவிகள் வழங்கப்படுகின்றன.
ஒரு புறம் ஆன்லைன் மூலம் பொருட்கள் கிடைக்க அனுமதியளித்துள்ள அரசு, ஏழை மக்களுக்கு நேரடியாக உணவுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில் பிறப்பித்துள்ள இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையை எதிர்த்து அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அமர்வு, ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கியது.
உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்களை வழங்குவதற்கு 48 மணி நேரத்துக்கு முன், சம்பந்தப்பட்ட மாவட்ட, மண்டல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், நிவாரணம் வழங்கும் இடத்தில் மூன்று பேர் மட்டும் உடன் செல்ல வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு நடவடிக்கைகள் - மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!