சென்னை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதியைச்சேர்ந்தவர் சிவபாலன்(27). பயோடெக் பட்டதாரியான இவர் சென்னை அண்ணா சாலையில் பிரபல மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 28ஆம் தேதி சிவபாலன் 20 லட்ச ரூபாய் எடுத்துக்கொண்டு ராயப்பேட்டையில் உள்ள அவரது நண்பரை சந்திக்கச்சென்றுள்ளார்.
அப்போது அண்ணா சாலை எஸ்பிஐ வங்கி அருகே மூன்று இரு சக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் சிவபாலனை அடித்து தாக்கிவிட்டு, கத்தியால் வெட்டிவிட்டு ரூ.20.22 லட்சத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடியது. இதையடுத்து சிவபாலன் ரத்தக்காயங்களுடன் அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் சென்று அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது குறித்து சிவபாலனிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது, தான் தனியாக மருத்துவ உபகரணங்கள் விற்பனைக் கடை தொடங்க முடிவு செய்து, அதற்காக சொந்த ஊருக்குச்சென்று பெற்றோரிடம் 20 லட்சம் ரூபாய் வாங்கி வந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்றதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால், மருத்துவ உபகரணங்கள் கடை அமைக்க சுமார் ஒரு கோடிக்கும் மேல் செலவாகும் என்பதால் சிவபாலன் மீது காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து சிவபாலனிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் தொடர்ந்து சிவபாலனிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டபோது சிவபாலன் 20 லட்சம் ரூபாய் பணம் தன்னுடையது இல்லை எனவும், பாரிமுனை பகுதியில் கடை நடத்தி வரும் சீமு என்பவரிடம் கடந்த மூன்று மாதங்களாக வேலை பார்த்து வருவதாகவும்; சீமு கொடுக்கும் பணத்தை அவர் சொல்லும் வங்கிக்கணக்கில் போட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கொள்ளையடிக்கப்பட்ட பணம் ஹவாலா பணம் எனவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கொள்ளையடிக்கப்பட்டது ஹவாலா பணம்தான் என காவல் துறையினர் உறுதி செய்த நிலையில் கொள்ளையர்களைத்தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 'அன்புள்ள அண்ணன்' என்று ஆரம்பித்துவிட்டு ஓபிஎஸ்ஸை கடிதத்தில் வறுத்தெடுத்த ஈபிஎஸ்!