பள்ளிக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு, சிறப்பு ஆசிரியர்களுக்கான கல்வித்தகுதி, ஆசிரியர் பணிநியமனம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றம், மதுரைக்கிளை நீதிமன்றம் ஆகியவற்றில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
பள்ளிக் கல்வித் துறைக்கு எதிராகத் தொடரப்படும் வழக்குகளுக்கு, உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்காததாலும், வழக்குகளைத் தொடர்ந்து கண்காணிக்காததாலும் தீர்ப்புகள் கல்வித் துறைக்கு எதிராக அமைகின்றன. கீழ் மட்டத்தில் உள்ள அலுவலர்கள் வழக்குகளைக் கையாளுவதில் அலட்சியம் காட்டுவதால், உயர் அலுவலர்களுக்கு அவப்பெயர் ஏற்படுவதோடு, நிர்வாகத்திலும் தேவையற்ற இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன.
கல்வி அலுவலர்களுக்கு, நீதிமன்ற நடைமுறை சார்ந்த அடிப்படை புரிதல் இல்லாததால் வழக்குகளை விரைந்து முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறையில் நீதிமன்ற வழக்குகளைக் கையாளுவது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இது குறித்து கல்வித் துறை அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “பள்ளிக் கல்வித் துறையில் அலுவலர்கள் முறையாகக் கையாள வேண்டிய பணியைச் சரியாகச் செய்யாதது, காலம் கடந்து செய்வது, எந்தவித காரணமுமின்றி செய்யாதிருப்பது போன்றவையே நீதிமன்ற வழக்குகள் ஏற்பட முக்கியக் காரணங்கள் ஆகும்.
அலுவலர் எந்த வழக்கினை சந்திக்கும்போதும் அவரது அதிகார வரம்புக்கு உட்பட்டது தானா? என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாத வழக்குகளில் தனது கடைமை எதுவோ அதனை தாமதமின்றிச் செய்ய வேண்டும். சட்டம், விதிகள், அரசாணை மற்றும் செயல்முறைகள் ஆகியவற்றுக்கு உட்பட்டு நீதிமன்ற தீர்ப்பாணைகளை நடைமுறைப்படுத்த விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டால், நீதிமன்றத்திலிருந்து வழக்கு சார்ந்த அறிவிப்பு வரப்பெற்றவுடன் அரசு வழக்குரைஞர்களை அணுகி அந்த வழக்கை நடத்துவதற்கான கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஒரு வழக்கில் பல அலுவலர்கள் சேர்க்கப்பட்டிருப்பின், அதில் எந்த அலுவலரின் ஆணை, செயல்முறையைப் பற்றி வழக்காடப்படுகிறதோ அவர் அந்தப் பணியைச் செய்ய வேண்டும்.
நீதிமன்றத்திலிருந்து தகவல் கிடைத்த 24 மணி நேரத்துக்குள் இதைச் செய்ய வேண்டும். நீதிமன்ற வழக்குகளில் தவறாக கருத்தை எடுத்துரைப்பதாலும், கருத்தை சொல்லாமல் விட்டுப்போவதாலும் ஏற்படும் விளைவுகளுக்கு சம்பந்தப்பட்ட அலுவலரே பொறுப்பாவார். இந்தச் சுற்றறிக்கையை அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்களின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : தேர்த் திருவிழாவில் பங்கேற்க அனுமதிச் சீட்டு - விதியை ரத்து செய்ய தீட்சதர்கள் போராட்டம்!