Emerald Lingam: தஞ்சாவூர் மாவட்டம் அருளானந்த நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தொன்மையான சிலைகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாகச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல் துறையினர் சாமியப்பன் என்பவரது வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின்போது சாமியப்பன் என்பவரின் மகன் அருண பாஸ்கரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனது தந்தையின் வங்கி லாக்கரில் தொன்மையான மரகத சிவலிங்கம் சிலை ஒன்று இருப்பதாக அவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மரகத சிவலிங்கம் சிலையை காவல் துறையினர் மீட்டனர்.
இதனையடுத்து மீட்கப்பட்ட மரகத சிவலிங்கம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இது குறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி கூறியதாவது, "மீட்கப்பட்ட மரகத சிவலிங்கம் தொன்மையானது. 500 கோடி ரூபாய்க்கு மேல் இதன் மதிப்பு இருக்கும். இது எந்தக் கோயிலுக்குச் சொந்தமானது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்.
ஏற்கனவே 2016ஆம் ஆண்டு தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான பிரம்மபுரீஸ்வரர் கோயிலிலிருந்து மரகத சிவலிங்கம் காணாமல்போனதாக வழக்கு உள்ளது. மீட்கப்பட்ட மரகத சிவலிங்கம் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமானதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும்" என்றார்.
இதையும் படிங்க: மரக்கடைக்கு தடையில்லா சான்று வழங்க கையூட்டுப் பெற்ற வனத் துறை அலுவலர்