சென்னை: கரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை வழங்குதல் மற்றும் வேலைவாய்ப்பகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் பின்பற்றப்பட்டு வரும் முன்னுரிமை முறையினை மறுசீரமைப்பு செய்தல் ஆகியவற்றுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசு வெளியிட்டுள்ள ஆணையில், "தமிழ்நாட்டு மக்களுக்கு குறிப்பாக தமிழ்வழியில் பயின்றவர்களுக்கும், அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கும், அரசுப் பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும்.
வேலைவாய்ப்பகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் நேரடி பணி நியமனங்களில் போரில் உடல் தகுதியை இழந்த ராணுவத்தினர், ஆதரவற்ற கைம்பெண்கள், கலப்பு திருமண தம்பதியினர் உள்ளிட்ட சில பிரிவினருக்கு முன்னுரிமை வழங்க ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இவ்வாணையின்படி, ஒவ்வொரு முறையும், நான்கு தொகுதிகளாக பிரித்து வைக்கப்பட்டுள்ள முன்னுரிமை வரிசைப்படி (Order of priority) ஆரம்பத்திலிருந்து வேலைவாய்ப்பகங்கள் பரிந்துரை செய்வதால், அந்த அரசாணையில் உள்ள அனைத்து முன்னுரிமை இனத்தவருக்கும் இந்த நன்மை சேராத நிலை தற்போது உள்ளது.
எனவே, 1970ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வரும் முன்னுரிமை வழங்கும் முறையினை சீரமைத்து மறுவெளியீடு செய்யும் வகையில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையரிடமிருந்து பரிந்துரைகள் பெறப்பட்டன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மழையின் போது மட்டுமல்ல, மக்களுக்கு தொடர்ந்து உதவிகள் செய்ய வேண்டும்- கமல்ஹாசன்