சென்னை: இந்தியாவின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான கட்டுரைப் போட்டியின் வெற்றியாளர்களை ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 2022ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் நாள் பள்ளி (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை) மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் மாநில அளவிலான கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டது.
பள்ளி அளவிலான மாணவர்களுக்கான கட்டுரைத் தலைப்பு “நான் விரும்பும் சுதந்திரப் போராட்ட வீரர்” (தமிழ்), “My favourite Freedom Fighter” (ஆங்கிலம்). கல்லூரி/பல்கலைக்கழக அளவிலான மாணவர்களுக்கான கட்டுரைத் தலைப்பு “2047-ல் இந்தியா” (தமிழ்) "India by 2047" (ஆங்கிலம்) என்றும் அளிக்கப்பட்டிருந்தன.
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பலநூறு மாணவர்கள் கட்டுரைகளை எழுதிய அனுப்பியிருந்தனர். அக்கட்டுரைகளை மதிப்பிட்ட வல்லுநர் குழு, இந்தப் போட்டிக்கு மாணவர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தாகவும், வந்துள்ள கட்டுரைகள் சிந்தனையைத் தூண்டும் விதமாக, உயர்தரமாக இருந்தன என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
வல்லுநர் குழு பரிந்துரைத்த தகுதிப் பட்டியலில், வெற்றியாளர்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளி மாணவர்கள் தமிழில் கட்டுரை எழுதி வெற்றி பெற்ற மூன்று மாணவர்களும், ஆங்கில கட்டுரை எழுதி வெற்றி பெற்ற மூன்று மாணவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதே போல கல்லூரி மாணவர்கள் தமிழில் கட்டுரை எழுதி வெற்றி பெற்ற மூன்று மாணவர்களும், ஆங்கில கட்டுரை எழுதி வெற்றி பெற்ற மூன்று மாணவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 12 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மயிலாடுதுறை, திண்டுக்கல், இராமநாதபுரம், திருவண்ணாமலை, கன்னியாகுமரி மற்றும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கல்லூரி அளவிலான போட்டியில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு முறையே ரூ.1,00,000 (ரூபாய் ஒரு இலட்சம்), ரூ.75,000 (ரூபாய் எழுபத்தைந்தாயிரம்) மற்றும் ரூ. 50,000 (ரூபாய் ஐம்பதாயிரம்) ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.
மேலும் பள்ளி அளவிலான போட்டியில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு முறையே ரூ.75,000 (ரூபாய் எழுபத்தைந்தாயிரம்), ரூ. 50, 000/- (ரூபாய் ஐம்பதாயிரம்) மற்றும் ரூ. 25,000 (ரூபாய் இருபத்தைந்தாயிரம்) வழங்கப்படும்.
வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அவர்களது பெற்றோர்கள் மற்றும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் முதல்வர்களுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்குவார்”, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குற்றவாளியாக தீர்ப்பெழுதப்பட்ட வளாகத்திலேயே மாவட்ட ஆட்சியராக அமர்ந்த தியாகி லட்சுமிகாந்தன் பாரதியின் சிறப்பு நேர்காணல்