சென்னை: சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில், துபாயிலிருந்து வந்த விமான பயணிகளிடம் சுங்கத் துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த பயணியிடம் விசாரணை செய்ததில், அப்பயணி முறையாகப் பதில் கூறாததால் அவரது உடமைகளைச் சோதனை செய்தனர்.
கடத்தல் தங்கம் பறிமுதல்
அப்பயணி கொண்டுவந்த ஹார்ட் டிஸ்கை (வன்தட்டு) பிரித்துப் பார்த்ததில், தங்கம் மறைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அத்தங்கத்தின் மதிப்பு 19 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் ஆகும். தங்கத்தின் மொத்த எடை 459 கிராம்.
மேலும் இருவரிடம் கடத்தல் தங்கம்
இதே போன்று, சார்ஜாவிலிருந்து கொழும்பு வழியாக வந்த விமானத்தில் பயணித்த இரண்டு பேரிடம் சந்தேகத்தின்பேரில் சோதனை நடத்தினர். சோதனையின்போது, பயணிகள் தங்கள் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்துக் கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
30 லட்சத்து நான்காயிரம் ரூபாய் மதிப்பிலான 690 கிராம் தங்கத்தை சுங்கத் துறை அலுவலர்கள் பறிமுதல்செய்தனர்.
அடுத்தடுத்து தங்கம் கடத்தல்
துபாயிலிருந்து திருவனந்தபுரம் வழியாக சென்னை வந்த விமான பயணிகளிடம் சோதனை நடத்தியதில், ஒருவரிடமிருந்து 43 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 995 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்செய்யப்பட்டது.
இதனையடுத்து, தங்கத்தைக் கடத்திவந்த நால்வரிடமும் சுங்கத் துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பறிமுதல்செய்யப்பட்ட மொத்தத் தங்கத்தின் மதிப்பு 93 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்