சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செப்.13ஆம் தேதி சட்டப்பேரவையில், ”கூட்டுறவு வங்கிகளில் ஐந்து சவரன் வரை பெறப்பட்ட நகைக்கடன் தகுதியின் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்படும்” என அறிவித்தார்.
அத்துடன் “நகைக் கடன் தள்ளுபடி தகுதியான ஏழை, எளிய மக்களுக்கு மட்டுமே செய்யப்படும். ஒரு குடும்பத்தில் ஒரு பயனாளருக்கும் மட்டும் இந்த தள்ளுபடி பொருந்தும். ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படாது" என்றும் தெரிவித்தார். இதையடுத்து கடன் பெற்றவர்களின் விவரங்களை அரசு சேகரித்துவந்தது.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறுகையில், "கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்புக்கான அரசாணை இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும். இந்த தள்ளுபடி அமலுக்கு வந்தவுடன் சுமார் 11 லட்சம் பேர் பயனடைவார்கள் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: நகைக்கடன் தள்ளுபடி: திருத்தப்பட்ட விவரங்களை கோரிய கூட்டுறவுத் துறை