சென்னை: பன்னிரண்டாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள் (செப்.7) ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் எனவும், (செப்.8) முதல் (செப்.10) ஆம் தேதி வரையில் மறுக்கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிகலாம் எனவும் அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பன்னிரண்டாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள் நகலினை (செப்.7) ஆம் தேதி புதன் கிழமை மதியம் 12 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு மாணவர்கள் விண்ணப்பிக்க விரும்பினால் அதற்கான விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து (செப்.8) முதல் (செப்.10) ஆம் தேதி மாலை 5 மணி வரையிலான நாட்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும் என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 'அண்ணா நூலகம் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே பெருமை..!' - அரவிந்த் கெஜ்ரிவால்