திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரை அடுத்த பொத்தூர் கிராமத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இலவச வீட்டு மனை பட்டா எந்தெந்த பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது என்பது குறித்த தகவல்களைக் கேட்டு, பொன்னேரி தனி தாசில்தாருக்கு இ.குமார் என்பவர் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அனுப்பினார். அந்த மனுவுக்கு உரிய பதிலை பொது தகவல் அலுவலர் தரவில்லை என மாநில தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்தார்.
பழங்குடியினர் நல அலுவலக தனி வட்டாட்சியருக்கு உத்தரவு
இந்த மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் சு.முத்துராஜ், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா மனுவில் கேட்கும் பகுதியில் யார் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற விபரங்களை 7 நாள்களுக்குள் வழங்க வேண்டுமென பொன்னேரி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக தனி வட்டாட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதேசமயம், தமிழ்நாடு முழுவதும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்களில் இதுவரை யார் யாருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான பட்டியலை மாவட்ட வாரியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளார்.
விசாரணை ஒத்திவைப்பு
மேலும், இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையை 2 மாதங்களில் ஆணையத்திற்கு தெரியப்படுத்த உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
அன்றைய தினம் நடைபெறும் காணொலி விசாரணைக்கு ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநர் மற்றும் மனுதாரர் ஆகியோர் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆதி திராவிடர் நலப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் - ஆணை வெளியீடு