சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் அளித்த புகாரில், ”13 வயதில் மகன் இருக்கும் நிலையில், 9 மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து விவகாரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகிறேன். மறுமணம் செய்து கொள்ள எண்ணி, மேட்ரிமோனி திருமண வலைதளத்தில் பதிவிட்ட சில நாட்களுக்குப்பின், என்னை தொடர்பு கொண்ட மனோகரன் என்பவர், மறுமணம் செய்து கொள்ள விரும்புவதாகக் கூறி பழகி வந்தார். ஆந்திராவில் தொழிலதிபராக இருப்பதாகவும், மாதம் 3 லட்சம் வரை சம்பாதிப்பதாகவும், விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருவதாகவும் கூறினார்.
அதனை நம்பி மனோகரனுடன் பழகி வந்ததோடு, அவருக்கு அடிக்கடி செல்ஃபோன், பணம் போன்றவற்றை பரிசாக கொடுத்து வந்தேன். திடீரென்று ஒருநாள், விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடுவதாகவும், உடனடியாக 10 லட்ச ரூபாய் அனுப்புமாறும் கூறியதால், அவரது வங்கிக் கணக்கிற்கு 10 லட்ச ரூபாயை அனுப்பினேன். ஆனால், அதன்பின் மனோகரன் தனது தொடர்பை முற்றிலுமாக துண்டித்ததோடு, செல்ஃபோனையும் அணைத்து விட்டார். பின்னர் விசாரிக்கும் போது தான் மனோகரன் மோசடிக்காரர் என்பது தெரியவந்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து சைதாப்பேட்டை சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மனோகரனின் செல்ஃபோன் எண் மற்றும் வங்கிக்கணக்கை வைத்து தேடி வந்துள்ளனர். அதில் ஹைதராபாத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்ததையடுத்து, அங்கு விரைந்த தனிப்படை அவரை கைது செய்தது.
விசாரணையில் ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த மனோகரன் (45), திருமணமாகி இரு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருவதும், வேலையிழந்து குடும்பத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால், சுலபமாக பணம் சம்பாதிக்க, மேட்ரிமோனியில் விவகாரத்து பெற்று மறுமணம் செய்து கொள்ள விரும்புவதாக பதிவிட்டுள்ள பெண்களிடம், தன்னை தொழிலதிபர் போல் காட்டி, திருமண ஆசை கூறி பல லட்ச ரூபாயை ஏமாற்றியது தெரியவந்தது. இதனையடுத்து மனோகரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 'மது அருந்தாததால் ரூ.5000 கொடுத்தால் போதும்' - கையூட்டுப் பெற்ற போக்குவரத்துக் காவலர் கைது