இது குறித்து இன்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்த போது, “மதுரை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கறுப்புப் பூஞ்சை வேகமாக பரவிவருகிறது. இந்த நோயை கடந்த 20ஆம் தேதி மத்திய அரசு பெருந்தொற்றாக அறிவித்தது.
இதனையொட்டி பிரதமருக்கு முன்னாள் முதலமைச்சரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார். அதில், "எனது கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாட்டிற்கான தடுப்பூசி, ரெம்டெசிவிர் மருந்துகளையும், ஆக்சிஜன் விநியோகத்தையும் அதிகப்படுத்தியதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது தமிழ்நாட்டில் கறுப்புப் பூஞ்சை நோய் வேகமாகப் பரவி வருவதை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.
கறுப்புப் பூஞ்சை நோய்க்கான ஆம்போடெரிசின்-பி மருந்தின் சப்ளையை தமிழ்நாட்டிற்கு அதிகரித்து பாதிக்கப்பட்டவர்கள் உயிரைக் காக்க உதவ வேண்டும்"என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
"தற்போது சில நாள்களாக மதுரையில் கரோனா தொற்று குறைந்துவரும் நிலையில், கரோனாவால் குணமடையும் சிலருக்கு கண்களில் கறுப்புப் பூஞ்சை நோய் தாக்கம் ஏற்பட்டு வருகிறது.
மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் கறுப்புப் பூஞ்சை அறிகுறியுடன் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகவே தமிழ்நாடு அரசும், மதுரை மாவட்ட நிர்வாகமும் கறுப்புப் பூஞ்சை நோயினால் யாருக்கும் உயிர் இழப்பு ஏற்படாதவாறு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த பட்டியலை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இதனால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படு்ம்” என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறினார்.