சென்னை: அதிமுகவைச் சேர்ந்த சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் அவர் மீதும், அவரது மனைவி ரம்யா மீதும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அவருக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்கள், உறவினர்களின் வீடுகள் ஆகியவற்றில் இன்று (அக். 18) காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் சோதனை நடத்திவருகின்றனர்.
6 மாவட்டம் 43 இடங்கள்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோயம்புத்தூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 43 இடங்களில் சோதனை நடைபெற்றுவருகின்றது.
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடப்பது இது நான்காவது முறை. அதன்படி, எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி. வீரமணி, ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சி. விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் இன்று சோதனை நடத்தப்பட்டுவருகிறது.
27 கோடி ரூபாய் சொத்து குவிப்பு
முதல் தகவல் அறிக்கையில் முதல் குற்றவாளி விஜயபாஸ்கர் எனவும், இரண்டாவது குற்றவாளி அவரது மனைவி ரம்யா எனவும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் குறிப்பிட்டுள்ளனர். விஜயபாஸ்கர், 2016ஆம் ஆண்டு தேர்தலின்போது ஆறு கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பில் சொத்து இருப்பதாக கணக்கு காண்பித்துள்ளார்.
பின்னர், 2021ஆம் ஆண்டு தேர்தலின்போது ரூ. 58 கோடிக்கு சொத்து இருப்பதாகவும், ரூ. 24 கோடிக்கு செலவுக் கணக்கையும் காண்பித்துள்ளார். வருமானத்திற்கு அதிகமாக ரூ. 27 கோடிக்குச் சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொன்விழா காணும் அதிமுக.. ஒற்றை தலைமைக்கு மாறுமா? தொண்டர்கள் எதிர்பார்ப்பு என்ன?