உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகள், அவர்களது குடும்பத்தினரை அவதூறாகப் பேசி காணொலி வெளியிட்ட விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ். கர்ணனின் பிணை மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் சி.எஸ். கர்ணன். இவர் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், அவர்களது குடும்பப் பெண்கள், பெண் வழக்குரைஞர்கள், உயர் நீதிமன்ற பெண் பணியாளர்கள் ஆகியோரை அவதூறாகப் பேசி சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
இது தொடர்பாக வழக்கறிஞர் தேவிகா கொடுத்த புகாரில் ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் கடந்தாண்டு டிசம்பர் 2ஆம் தேதி காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தனக்குப் பிணை வழங்கக் கோரி சி.எஸ். கர்ணன் தாக்கல்செய்த மனுவை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.எஸ். கர்ணன் பிணை கோரி மனு தாக்கல்செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி. பாரதிதாசன் முன்பு விசாரணை நடைபெற்றுவந்தது. அப்போது, கடந்த 2017ஆம் ஆண்டு முதலேதான் கடும் மன அழுத்தத்திலும் விரக்தியிலும் இருந்துவந்த நிலையில் நீதிபதிகள் குறித்து அவதூறு காணொலிகள் வெளியிட்டதாகவும், தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதால் தனக்குப் பிணை வழங்க வேண்டும் என சி.எஸ். கர்ணன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
காவல் துறை தரப்பில், நீதிமன்றம் எச்சரித்த பின்னரும் நீதிபதிகள், அவர்களின் குடும்பத்தினர், நீதிமன்றத்தில் பணியாற்றும் பெண்கள் குறித்து 20 அவதூறு காணொலிகளை கர்ணன் வெளியிட்டதால் அவருக்குப் பிணை வழங்கக் கூடாது எனக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வி. பாரதிதாசன், சி.எஸ். கர்ணனின் பிணை மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.