சென்னை: கடந்த 6 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்ததால், சென்னையில் பல இடங்களில் மழை நீர் சூழ்ந்தது.
இதனால் வீடு மற்றும் சாலைகளில் மழைநீர் புகுந்து, அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். காவல்துறை சார்பாக 13 காவல் மீட்பு குழுக்கள் மற்றும் காவல் அலுவலர்கள் இணைந்து, மழை நீர் தேங்கிய இடங்களில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்டும், நிவாரண உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.
மேலும், தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர், மாநகராட்சியினர் கீழே விழுந்த மரங்களை அப்புறப்படுத்தியும், மழை நீரை மின் மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மழை நீர் தேங்கியுள்ள வீடுகளை கண்காணித்து, அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருத்துவ தேவைகளை உடனடியாக வழங்குவதற்காக காவல் துறையினர் டிரோன்களை பயன்படுத்துகின்றனர்.
குறிப்பாக, மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள், உபகரணங்கள் மற்றும் மருந்துகளை உடனடியாக அனுப்ப தண்ணீரில் மிதந்து செல்லும் வகையில், அதி நவீன டிரோன்களை பயன்படுத்தி வருகின்றனர்.
நீர்நிலைகள், மேம்பாலங்கள் அருகே நின்று பொதுமக்கள் செல்பி எடுக்க வேண்டாம் எனவும், குழந்தைகளை மழை நீர் தேங்கிய பகுதிகளுக்கு அனுப்ப வேண்டாம் என ட்ரோனில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, மெரினா கடற்கரை, மயிலாப்பூர், கொளத்தூர், புளியந்தோப்பு உள்ளிட்ட இடங்களில் காவல் துறையினர் இந்த அதிநவீன டிரோன்களை பயன்படுத்தி வருகின்றனர். டிரோன்களை கையாளும் 10 தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு 5 ட்ரோன் கேமராக்களை பயன்படுத்தி வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மிதக்கும் வீட்டை பார்த்திருக்கிறீர்களா - மழை, வெள்ளம் வந்தா கூட ஒண்ணும் பண்ண முடியாது!