சென்னை: விமான நிலையத்தில் நேராக்கப்பட்ட ப்ராவோ ஓடுபாதை இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. இதன் மூலம் விமானங்கள் பாதுகாப்பாகவும், விரைவாகவும் இயக்கப்படும் எனவும்; மேலும் தற்போதுள்ள முதன்மை ஓடுபாதையில் கையாளும் திறனும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் சென்னை விமான நிலையத்தில் 90 விழுக்காடு உள்நாட்டு, சர்வதேச சரக்கு விமானப் போக்குவரத்து நடைபெற்று வரும் முதன்மை ஓடுபாதைக்கு இணையானதாக நேராக்கப்பட்ட ப்ராவோ ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இருந்த ஓடுபாதை வளைவாக இருந்ததால் முதன்மை ஓடுபாதைக்கு வருவதற்குக் கூடுதல் நேரம் பிடித்ததோடு எரிபொருளும் அதிகமாகச் செலவானது. தற்போது ப்ராவோ ஓடுபாதை நேராக்கப்பட்டதால் விமானங்களின் இயக்கங்கள் துரிதமாவது உறுதி செய்யப்படுவதோடு அதிக போக்குவரத்துள்ள நேரங்களில் தாமதமாவதும் தவிர்க்கப்படும்.
ப்ராவோ ஓடுபாதை இன்று செயல்பாட்டுக்கு வந்த நிலையில் வெளிச்செல்லும் விரைவு ஓடுபாதையின் 1 மற்றும் 2-க்கான பணிகள் முடியும்தருவாயில் உள்ளன. இந்தப் பணிகள் நிறைவடைந்த பின் மணிக்கு 36 விமான இயக்கங்கள் என்பது மணிக்கு 45-50 இயக்கங்களாக அதிகரிக்கும் என்றும் சென்னை விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: திமிங்கலம் வடிவிலான "ஏா்பஸ் பெலுகா" விமானம் சென்னை வருகை!