சென்னை: துபாய், இலங்கை நாடுகளிலிருந்து சென்னைக்கு வந்த மூன்று பெண் பயணிகளிடமிருந்து 57 லட்சம் ரூபாய் மதிப்புடைய 1.19 கிலோ தங்கம் பறிமுதல்செய்யப்பட்டு, நான்கு பெண் பயணிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
துபாயிலிருந்து ஃபிளை துபாய் ஏா்லைன்ஸ் விமானம் நேற்று (நவம்பர் 17) காலை சென்னை பன்னாட்டு விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளைச் சுங்கத் துறை அலுவலர்கள் சோதனையிட்டனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த மூன்று பெண் பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை நிறுத்தி விசாரணை நடத்தியதில், அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசினர்.
இதையடுத்து பெண் சுங்கத் துறையினர், மூன்று பெண் பயணிகளையும் தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனையிட்டதில், அவர்களது உள்ளாடைகளுக்குள் ஆறு சிறிய பார்சல்கள் மறைத்துவைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர். அதனுள் தங்கப் பசை மறைத்துவைக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, மறைத்துவைக்கப்பட்டிருந்த 763 கிராம் தங்கப் பசையைப் பறிமுதல்செய்து மூன்று பெண்களையும் கைதுசெய்தனர். இதையடுத்து இலங்கையிலிருந்து ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானம் சென்னை பன்னாட்டு விமான நிலையம் வந்தது.
அதில் வந்த பயணிகளை அலுவலர்கள் சோதனையிட்டனர். அப்போது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரைச் சோதனை செய்தபோது அவருடைய உள்ளாடைக்குள் தங்க வளையல்கள், தங்கப் பசை மறைத்துவைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர்.
மேலும், அந்தப் பெண் கொண்டுவந்த 429 கிராம் தங்கத்தைப் பறிமுதல்செய்தனர். துபாய், இலங்கையிலிருந்து அடுத்தடுத்து வந்த இரண்டு விமானங்களில் நான்கு பெண் பயணிகளிடம் மொத்தம் 57 லட்சம் ரூபாய் மதிப்புடைய 1.19 கிலோ தங்கம் பறிமுதல்செய்யப்பட்டு, நான்கு பெண் பயணிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தலைமை நீதிபதியின் பணிகளை தற்காலிகமாக இவர்தான் கவனிப்பார்!