சென்னை: தமிழ்நாட்டில் கோவிட் தடுப்பூசி பணிகள் மிகவும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டுவருகின்றன.
இதனை விரிவாக்கம் செய்யும் பொருட்டு, சிறப்பு முகாம்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டு முதலாவது மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் செப்டம்பர் 12 அன்று நடைபெற்றதில் 28.91 லட்சம் பயனாளிகளுக்கும், இரண்டாவது மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் செப்டம்பர் 19 அன்று நடைபெற்றதில் 16.43 லட்சம் பயனாளிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, மூன்றாவது மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் செப்டம்பர் 26 அன்று நடைபெற்றதில் 25.04 லட்சம் பயனாளிகளுக்கும், நான்காவது மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் அக்டோபர் 3 அன்று நடைபெற்றதில் 17.40 லட்சம் பயனாளிகளுக்கும் ஆக மொத்தம் 87 லட்சத்து 80 ஆயிரத்து 262 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் இதுவரை ஐந்து கோடியே ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 323 பயனாளிகளுக்கு அரசு, தனியார் மையங்களின் மூலம் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக மூன்று கோடியே 73 லட்சத்து 18 ஆயிரத்து 608 பயனாளிகளுக்கும் (64%), இரண்டாவது தவணையாக ஒரு கோடியே 28 லட்சத்து 11 ஆயிரத்து 715 பயனாளிகளுக்கும் (22%) செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஐந்தாவது மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் வரும் 10ஆம் தேதியன்று நடைபெற தகுந்த முன் ஏற்பாடுகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாநில தடுப்பூசி மருந்து கிடங்கினைப் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
தற்போது 50.12 லட்சம் கோவிட் தடுப்பூசி கையிருப்பிலுள்ளது. அடுத்து வரும் மூன்று நாள்களில் சுமார் ஆறு லட்சம் பயனாளிகளுக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டாலும், ஐந்தாவது சிறப்பு முகாமிற்கு சுமார் 44 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. எனவே, சுமார் 30 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பு
தமிழ்நாட்டில் தற்போது மூன்றாவது முறையாக மக்களிடையே உள்ள கோவிட் நோய் எதிர்ப்பு சக்தி குறித்த ஆய்வு (Sero Surveillance Survey) நடத்தப்பட்டதில் விருதுநகர், தென்காசி, சென்னை ஆகிய மூன்று மாவட்டங்களில் 80 விழுக்காடு அதிகமாகவும், பெரம்பலுர், அரியலுர், நீலகிரி, கருர் மாவட்டங்களில் 60 விழுக்காடு குறைவாக உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, மேற்கூறிய நான்கு மாவட்டங்களுக்குத் தடுப்பூசி பணிகளை மேம்படுத்தும் பொருட்டு அதிகமான அளவில் கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 1,390 பேருக்கு கரோனா