கரோனா காரணமாக ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருந்த கலை அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் தேர்வுகள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து, இறுதி செமஸ்டர் தேர்வுகள் தவிர்த்து மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படும் என்றும், முந்தைய தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், நாளைக்குள் (ஆகஸ்ட் 7) தேர்வு கட்டணங்களை கல்லூரி நிர்வாகங்கள் செலுத்த, அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரத்து செய்த தேர்வுகளுக்கான கட்டணங்களை எவ்வாறு செலுத்த முடியும் என்றும், இத்தொகையை எப்படி மாணவர்களிடம் கேட்பது என்றும் கல்லூரி நிர்வாகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
இது குறித்து உயர்கல்வித்துறை தரப்பில் கேட்டபோது, மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பல பணிகள் இருப்பதால், ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு உரிய தேர்வு கட்டணங்களை மாணவர்கள் செலுத்த வேண்டும் என்றும், அதனடிப்படையிலேயே பொறியியல் தேர்வு கட்டணங்களை அண்ணா பல்கலைக்கழகம் கேட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இதுவரை மாணவர்களிடம் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாத நிலையில், திடீரென நாளைக்குள் ஆயிரக்கணக்கான மாணவர்களின் கட்டணத் தொகையை மொத்தமாக எவ்வாறு செலுத்துவது என்று கல்லூரி நிர்வாகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
இதையும் படிங்க: 'ஆசிரியர் நியமனத்தில் எம்.பி.சி பிரிவுக்கு இழைக்கப்பட்ட அநீதியை அரசு போக்க வேண்டும்' - ராமதாஸ்